Enable Javscript for better performance
நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?- Dinamani

சுடச்சுட

    

    நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா ?

    By DIN  |   Published on : 28th April 2018 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க நீடாமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர். 
    நீடாமங்கலம் ரயில் நிலையம் வழியாக நாள்தோறும் பயணிகள் ரயில், விரைவு ரயில், வாராந்திர மற்றும் சரக்கு ரயில்கள் சென்று வருகின்றன. ரயில்களின் இயக்கத்தின்போது, ரயில்பாதை மூடுவதால் ஒரு நாளில் சுமார் 7 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், விபத்துகளும் ஏற்படுகின்றன. 
    இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கடந்த கால மத்திய ஆட்சியில் நீடாமங்கலம் புறவழிச் சாலைத் திட்டத்துக்கு ரூ. 100 கோடி ஒதுக்கியது. பின்னர், திருச்சி - நாகப்பட்டினம் வரையிலான நான்கு வழிச் சாலைத் திட்டத்தால் புறவழிச் சாலைத் திட்டம் கைவிடப்பட்டது. நிதி பற்றாக்குறையால் 4 வழிச்சாலைத் திட்டம் இரண்டு வழிச் சாலைத் திட்டமாக மாற்றப்பட்டு அப்பணி பல்வேறு காரணங்களால் தற்போது தடைபட்டுள்ளது. 
    மேம்பாலம்: இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா நீடாமங்கலம் மேம்பாலம் திட்டத்துக்காக அரசின் 110-ஆவது விதியின்கீழ் ரூ. 20 கோடி ஒதுக்கினார். 
    இதையடுத்து, தமிழக நெடுஞ்சாலைத்துறையினர் அதற்கான திட்ட மதிப்பீட்டை தயாரித்து மேம்பாலம் அமைவதற்கான வரை படத்தை தயாரித்தனர். ரயில்வே உயர் அலுவலர்களும், தமிழக நெடுஞ்சாலைத் துறைப் பொறியாளர்கள் வரைபடத்தை கொண்டு மேம்பாலம் அமையும் வாய்ப்புள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர்.
    அப்போது மேம்பாலம் அமைய சில ஆண்டுகளாகும், உடனடியாக  கீழ்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக ரயில்வே துறை உத்தரவாதம் அளித்தது. இத்திட்டத்துக்கு மத்திய அரசு ரூ. 44.44 கோடி ஒதுக்கியது. மேம்பாலம் அமைக்க மண் ஆய்வு நடத்தப்பட்ட பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. இதற்கு காரணம் மேம்பாலம் அமையும் பகுதியில் (ஒரத்தூர் கிராமம்) நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் உள்ளதால் அதற்கான நிலங்கள் பாதிக்கும் என கோவை வேளாண் பல்கலை மூலம் அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டதால் மேம்பாலம் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
    எனவே, நீடாமங்கலத்தில் நிகழும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கவும்,  கிடப்பில் போடப்பட்டுள்ள தஞ்சை - நாகை இருவழிச் சாலைப் பணியை துரிதப்படுத்தவும், இந்த இரண்டு பணிகளுக்கும் இடையே கீழ்ப்பாலம் அமைக்கும் பணியையும், முதல்வர் சிறப்பு கவனம் செலுத்தி தொடங்க வேண்டும் என்பதே து பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai