Enable Javscript for better performance
காவிரி நீர் உரிமையை போராடி பெற்றுத் தருவோம்: முதல்வர் உறுதி- Dinamani

சுடச்சுட

  

  காவிரி நீர் உரிமையை போராடி பெற்றுத் தருவோம்: முதல்வர் உறுதி

  By DIN  |   Published on : 29th April 2018 01:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி பிரச்னையில் உரிமையைப் போராடி பெற்றுத் தருவோம் என தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கூறினார்.
  காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12 -ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உடனே நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி, அதிமுக சார்பில் திருவாரூர் வன்மீகபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:
  பல ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய காவிரிப் பிரச்னை எழும்போதெல்லாம் தமிழகத்துக்கு பாதகமாக முடிகிறது. 1892 -இல் சென்னை மாகாணமும், மைசூர் சமஸ்தானமும் காவிரி நீர்ப் பகிர்வு உடன்படிக்கை செய்து கொண்டன. 1924 -இல் மைசூரு கிருஷ்ணசாகர் அணை, மேட்டூர் அணை கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. அப்போது 50 ஆண்டுகால உடன்படிக்கை ஏற்படுத்தப்பட்டது. 1956 -இல் மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, குடகு பகுதி கர்நாடகத்துக்குச் சென்றது. 1954 -இல் புதுச்சேரி மாநிலம் பிரதேசம் ஆனதால் காரைக்கால் நீர் பெற்றது. 1960 -இல் கபினி நீரில் பங்கு கேட்டது கேரளம். 1970 வரை நீர் பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி நீடித்தது.
  காவிரி பிரச்னையில் தமிழக உரிமையைத் தாரை வார்த்தவர் கருணாநிதி. 1970-இல் தமிழ்நாடு சட்டப் பேரவையில், ஹேமாவதி அணை கட்டுவதில் எவ்வித மறுப்பும் இல்லை என பேசியுள்ளார். இதைத் தொடர்ந்து காவிரியின் உப நதியான கபினி, ஹேமாவதி, சொர்ணாவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை, மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமல் தன்னிச்சையாக கர்நாடகம் தொடங்கியது. இதை அப்போதைய திமுக அரசு தடை செய்யவில்லை.
  காவிரிப் பிரச்னை தொடர்பாக, இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 1971 ஆகஸ்ட் 4 -இல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது பிரதமர் இந்திரா காந்தி. அந்த நேரத்தில் தமிழகத்தில் லஞ்சம் உள்ளிட்டவை தலை விரித்து ஆடியது.
  மத்திய அரசின் மிரட்டலால் கருணாநிதி 1972 ஆகஸ்ட் 28 -இல் அந்த வழக்கை தன்னிச்சையாக வாபஸ் பெற்றார். தன் அரசைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் அடிபணிந்து, தமிழகத்துக்கு துரோகம் செய்தவர் கருணாநிதி.
  நடுவர் மன்றம் அமைக்க வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் காவிரி பாசன விளைபொருள்கள் சங்கம் சார்பில் வழக்குத் தொடர்ந்தார் காவிரி ரங்கநாதன். 1986 -இல் எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். இவ்வழக்கில் தமிழக அரசும் இணைந்து கொண்டது. பின்னர், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. இடைக்கால ஆணை வழங்கக் கோரி தமிழகம், புதுவை அரசுகள் வழக்குகள் தொடர்ந்தன. 1991 -இல் வந்த இடைக்காலத் தீர்ப்பில் 205 டி.எம்.சி. நீர் வழங்க உத்தரவிடப்பட்டது. இத்தீர்ப்பு அரசிதழில் 1991 டிச. 12 -இல் வெளியிடப்பட்டது. இதைச் செயல்படுத்த 1992 -இல் அதிமுக அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், நடவடிக்கையும் இல்லாததால் 1993 ஜூலையில் 80 மணிநேரம் மெரீனாவில் ஜெயலலிதா உண்ணாவிரதம் இருந்தார். 1996-இல் திமுக ஆட்சியில் இப்பிரச்னையில் சுணக்கம் ஏற்பட்டது.
  2007 -இல் இறுதி ஆணையை நடுவர் மன்றம் வழங்கியது. அப்போது 192 டி.எம்.சி. கிடைத்தது. இறுதி ஆணையைச் செயல்படுத்த வலியுறுத்தி ஜெயலலிதா குரல் கொடுத்தார். அப்போதும் திமுக நடவடிக்கை எடுக்கவில்லை.
  2007 -இல் கேரளம், கர்நாடகம், தமிழகம் ஆகியவை, தீர்ப்பை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தன. தற்போது அழுத்தம் கொடுக்கவில்லை எனக் கூறும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், 2007 -இல் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? அப்போது அழுத்தம் கொடுத்திருந்தால் 11 ஆண்டுகளாக இஏஈபிரச்னை நீடித்திருக்காது. கர்நாடகத்திடம் கெஞ்சி நீரை வாங்க வேண்டியிருக்காது. விவசாயிகள் துன்பப்படத் தேவையில்லை.
  விவசாயிகள் உயிரிழந்ததாக ஸ்டாலின் கூறுகிறார். இவர்கள் சரியான முறையில் நடவடிக்கை எடுத்திருந்தால் விவசாயிகள் உயிரிழந்திருக்க மாட்டார்கள். அவர்கள் செய்த தவறை மறைக்க ஊர் ஊராக பயணம் செல்கின்றனர்.
  ஆனால், தற்போதைய அரசு போதிய அழுத்தம் கொடுத்து வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநிலப் பிரச்னைக்காக நாடாளுமன்றத்தை 24 நாள்கள் முடக்கினார்கள். மாநில உரிமையைப் பெறுவதற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்ததால், 2011 அரசிதழில் தீர்ப்பு வெளியிடப்பட்டது.
  விவசாயிகளுக்கு குரல் கொடுத்து, கடிதம் எழுதியவர் ஜெயலலிதா. கடந்த பிப்.16 -இல் இறுதி தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் காவிரி நீரை யாரும் உரிமை கொண்டாட முடியாது எனத் தெரிவித்துள்ளது. இத்தீர்ப்பை அமல்படுத்த தாமதப்படுத்தியதால், அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது.
  இத் தீர்ப்பை அமல்படுத்தாததால், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. காவிரி விவகாரத்தில் எம்ஜிஆரில் தொடங்கி, ஜெயலலிதா வரை போராடி தற்போது இறுதி வடிவம் கிடைத்துள்ளது. காவிரி நீர் உரிமையைப் பெற்றுத் தருவதில் இறுதி வரை போராடி, பெற்றுத் தருவோம். இதற்காக எவ்வித தியாகத்தையும் செய்வோம் என்றார் முதல்வர் பழனிசாமி.
  கூட்டத்துக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தலைமை வகித்தார். இதில் நாகை மக்களவை உறுப்பினர் கே. கோபால், விவசாய சங்க பிரதிநிதிகள் காவிரி ரங்கநாதன், சத்தியநாராயணன், சேதுராமன், பயரி கிருஷ்ணமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai