Enable Javscript for better performance
மானியத்துடன் சோலார் மின் சாதனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    மானியத்துடன் சோலார் மின் சாதனம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

    By DIN  |   Published on : 29th April 2018 04:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளில் 30 சதவீத மானியத்துடன் சூரிய மின்சக்தி உற்பத்தி (சோலார் மின் சாதனம்) அமைக்க விண்ணப்பிக்கலாம் என, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து, அவர் வெளியிட்டசெய்திக் குறிப்பு:
    அத்தியாவசிய எரிபொருள்களின் பற்றாக்குறை, சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகிய பிரச்னைகளுக்கு மரபு சாரா எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்தி மின்சக்தியை உருவாக்க தமிழ்நாடு அரசு முனைந்துள்ளது.
    தற்போது, மத்திய அரசின் 30 சதவீத மானியத்துடன் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யும் திட்டத்தின் மூலம் தமிழக அரசு, அனைத்து பொதுமக்களும் பயனடையும் வகையில், சோலார் மேற்கூரை அமைக்க வழிவகை செய்துள்ளது. இச்சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் மின் கட்டணத்தை குறைக்கலாம். இச்சாதனத்தை அமைப்பவர்கள் உபயோகித்தது போக மீதமுள்ள மின்சாரத்தை நிகர அளவி மூலம் மின்வாரியத்துக்கு அனுப்பப்படுவதால் மின்கட்டணம் முற்றிலும் குறைக்கப்படுகிறது.
    இச்சாதனத்தின் விலை மானியம் போக கிலோவாட் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.42,000 தொகை செலுத்தினால் போதுமானது. சோலார் மூலம் சேமிக்கும் மின்சக்தியினால் நீங்கள் செய்யும் முதலீட்டுத் தொகை 4 அல்லது 5 ஆண்டுகளில் ஈடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் அனைவரும் தங்களுடைய மின் தேவைக்கேற்ப 1கிலோவாட் முதல் 500 கிலோவாட் வரை பயன் பெறலாம்.
    மானியம் பெறுவதற்கு அனைத்து தனிநபர், அடுக்குமாடி குடியிருப்புகள், தனியார் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் ஆதரவற்றோர் இல்லங்கள், காப்பகங்கள், மாற்றுத் திறனாளிகள் மறு வாழ்வு மையம் போன்றவை தகுதியானவை.
    திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாடு முகமை மூலம் மரபு சாரா எரிசக்தியை மேம்படுத்தும் திட்டங்கள் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் தனிநபர் அல்லது நிறுவனங்கள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் இயங்கி வரும் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாடு முகமையின் பொறியாளரை அணுகி உரிய ஆலோசனைகள் பெறலாம். 7708064724, 7708062707 ஆகிய செல்லிடப்பேசி எண்கள் வாயிலாகவும், ற்ஸ்ழ்ஃற்ங்க்ஹ.ண்ய் என்கிற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு மின் சக்தியின் பயன்பாடுகள், மானியம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்களை பெறலாம் எனத் தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai