விவசாயத்துக்கு தடையின்றி இலவச மின்சாரம் விநியோகிக்க வேண்டும்: விவசாயிகள் சங்க ஒன்றியப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானம்
By DIN | Published on : 14th July 2018 09:27 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திடும் வகையில், விவசாயத்துக்கு தடையின்றி மும்முனை மின்சாரமும், இலவச மின்சாரமும் விநியோகிக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மன்னார்குடி ஒன்றிய பேரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி காந்திஜீ சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு விவசாயச் சங்க ஒன்றியத் தலைவர் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினருமான வை. சிவபுண்ணியம் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். தியாகிகள் நினைவு ஸ்தூபியைக் கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் வை. செல்வராஜ் திறந்துவைதார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கர்நாடக அரசு ஜூன் 12-ஆம் தேதி காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடாததால், குறுவை சாகுபடி செய்யமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், கூட்டுறவு சங்கத்தில் பெற்றுள்ள பயிர்க்கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும். துளசேந்திரபுரம் ஏரியை தூர்வாரி, கரைகளை பலப்படுத்திடவும், பாசன வடிகால் மதகுகளை செப்பனிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல், கூப்பாச்சிக்கோட்டை, ஆலங்கோட்டை, மகாதேவப்பட்டணம் ஏரிகளையும் தூர்வார வேண்டும்.
இயந்திரம் மூலம் நடைபெறும் நடவு பணிக்கு வழங்குவதைப்போல், கை நடவு செய்யும் விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு தலா ரூ.4 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்கிட வேண்டும். விவசாயத்துக்கு தட்டுப்பாடு இன்றி கிடைத்திடும் வகையில், மும்முனை மின்சாரமும், இலவச மின்சாரமும் விநியோகிக்க வேண்டும். அத்துடன் தேவையான அளவுக்கு விதை நெல், உரம், இடுபொருள்களை வேளாண்மைத் துறையினர் இருப்பு வைக்க வேண்டும். மன்னார்குடி ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் வேளாண் கல்லூரியை தமிழக அரசு தொடங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக, மாநாட்டை விவசாயச் சங்க மாவட்டத் துணைச் செயலாளர் கே.ஆர். ஜோசப் தொடங்கி வைத்தார். இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர். வீரமணி, விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் ஆர். சதாசிவம், பொருளாளர் எஸ்.ஆர். திரவியம், மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் எஸ். ராகவன், செயலாளர் பி. நாகேஷ், இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலாளர் எஸ். பாப்பையைன், மாதர் சங்க ஒன்றியத் தலைவர் பி. பாஸ்கரவள்ளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.