சுடச்சுட

    

    குறுவைக்கு ஜூன் 12-இல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 01st June 2018 09:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குறுவை சாகுபடி செய்ய ஏதுவாக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
    திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாழக்கிழமை ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தலைமையில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசியது: 
    முத்துப்பேட்டை முருகையன்: முத்துப்பேட்டை அருகே பாமணி ஆற்றில் உள்ள தடுப்பணை காரணமாக அப்பகுதியினர் பயனடைகின்றனர். இதேபோல், மக்களுக்கு பயனளிக்கும் வகையில் தடுப்பணைகளை கூடுதலாக்க வேண்டும். முத்துப்பேட்டை அருகே எழிலூர் ஏரியை தூர்வாரினால் பல லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் நீர்ஆதாரம் பெறும். மேலும், திருத்துறைப்பூண்டி தாலுக்கா முழுமைக்கும் குடிநீர்த் தட்டுப்பாடு குறையும். இறவை பாசன திட்டங்கள் பயனுக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    நீடாமங்கலம் மருதப்பன்:  சிறுகுறு விவசாயிகளுக்கு மும்முனை மின்சார வசதி செய்துதர வேண்டும். நீடாமங்கலம் காவல் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ள வாகனங்களை ஏலம் விட்டால், அரசுக்கு வருவாய் கிடைக்கும். விவசாயிகளுக்கு விதை நெல் கிடைக்க வேளாண்துறை ஏற்பாடு செய்ய வேண்டும்.
    குடவாசல் சேதுராமன்: குளங்களில் நீர் சென்று சேரும் வகையில் வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். போர் வசதி உள்ள விவசாயிகள் 90 சதவீத குறுவைப் பணிகளை முடித்துள்ளனர். ஆற்றுப்பாசன விவசாயிகள் எவ்வித பணிகளையும் தொடங்கவில்லை. எனவே, விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் ஜூன் 12-இல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    பேரளம் வி. பாலகுமாரன்: பழைய மின்மோட்டார்களை மாற்றி விட்டு, புதிய மின்மோட்டார்கள் வாங்க அரசு மானியம் அறிவித்தது. அதன்படி, விவசாயிகளும் மின்மோட்டார்களை மாற்றினர். ஆனால், இதுவரையில் மானியம் வழங்கவில்லை. இதேபோல், வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஜிப்சம், சிங் சல்பேட், தார் படுதாய் ஆகியவை இல்லை. இதை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது குறுவை சாகுபடி தொடங்க உள்ள நிலையில் இடுபொருள்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    கங்களாஞ்சேரி ராமகிருஷ்ணன்:  டெல்டா மாவட்டத்தில், போர் இல்லாத பகுதிகளில், சாகுபடிக்கு முறையாக தண்ணீர் செல்ல பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ணைக் குட்டைகளை வெட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை தர வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் அனுமதித்தால், ஊழல் நடைபெற வாய்ப்புள்ளது. வெட்டாறு, சித்தாறு மற்றும் வடிவாய்க்கால்களில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து பட்டியல் தர வேண்டும்.  65 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு பஸ் பாஸ் வழங்க வேண்டும். அத்துடன் நீண்ட தூர பயணங்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை வேண்டும். 
    கூட்டத்தில் ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் பேசியது: விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகள் குறுவை சாகுபடிக்கு காப்பீடு செய்வதில் அக்கறை செலுத்துவதில்லை. ஏனெனில், குறுவை சாகுபடி எப்போதும் நடைபெறாது என்ற எண்ணமே இதற்கு காரணம். சாகுபடி இல்லையென்றாலும் 25 சதவீத இழப்பீடு கிடைக்கும். எனவே, குறுவை சாகுபடிக்கான பிரீமியத்தொகையை அனைத்து விவசாயிகளும் செலுத்த வேண்டும் என்றார்.
    கூட்டத்தில் செயற்பொறியாளர்கள் (வெண்ணாறு வடிநிலக்கோட்டம்) அசோகன், (காவிரி வடிநிலக் கோட்டம்) இக்பால், வேளாண் இணை இயக்குநர் சந்துரு, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் காந்திநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai