போராட்டம் இல்லாமல் வாழ்க்கை அமைந்துவிடாது: மு.க. ஸ்டாலின்
By DIN | Published on : 01st June 2018 09:55 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
போராட்டம் இல்லாமல் வாழ்க்கை அமைந்துவிடாது என திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், அம்மையப்பன் பாரத் கல்வியியல் கல்லூரியில் எட்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு திருவாரூர் மாவட்ட கைப்பந்து கழகத் தலைவர் பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏசித்தமல்லி ந. சோமசுந்தரம், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கல்வியியல் துறை இணைப் பேராசிரியர் ப. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திமுக செயல் தலைவரும், சட்டப் பேரவை எதிர்க் கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசியது:
இங்கு பட்டம் பெறும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை, சுயமரியாதை வந்திருக்கும். தெளிந்த சிந்தனை, பார்வை ஏற்பட்டிருக்கும். மாணவர்களின் திறமை, நாட்டுப்பற்று, தமிழ்மொழி பற்றைப் பார்த்து இனி நாடே தலை வணங்கப்போகிறது.
பட்டம் பெற்றிருக்கும் மாணவர்களுக்கு இருவேறு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று உயர்கல்வி கற்க விரும்பலாம். மற்றொன்று வேலை வாய்ப்பு. இங்குள்ள மாணவர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளாகவும், அரசியல் தலைவர்களாகவும் வரலாம். மாணவர்களால் அரசியல்வாதியாக வரமுடியும். தூய்மையான அரசியல், நேர்மையான பார்வை இரண்டும் நாட்டுக்கு வெளிச்சம் தரக்கூடியவை. மாணவர்கள் நாட்டின் அரசியலையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும். அது தீண்டத்தகாத பாதை என்று யாரும் நினைத்துவிடக்கூடாது.
சாதி பேதங்களையும், மூடநம்பிக்கைகளையும் தூக்கி எறிய அண்ணா அறிவுறுத்தியுள்ளார். ஆதிக்கக் கொடுமைகளை அடியோடு தூக்கியெறிய வேண்டும். மாணவப் பருவத்திலிருந்து இளைஞர் பருவத்துக்கு மாறும் நீங்கள், ஒரு பிரச்னையைப் பற்றி எந்தக் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து சொன்னாலும், அதில் நல்ல விஷயம் உள்ளதா? ஏற்றுக்கொள்ளலாமா? என்பதை யோசித்துப்பார்க்க வேண்டும். அநியாயங்களைத் தட்டிக்கேட்பவர்களாக மாணவர்கள் இருக்க வேண்டும்.
இளைஞர்கள்தான் நாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த முடியும். 1967-இல் திமுக ஆட்சிக்கு வர மாணவர்களும், இளைஞர்களும்தான் காரணம். அப்போது இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடியவர்கள் மாணவர்கள்தான். ஆனால், ஒருசிலர் போராட்டம் தேவையில்லை என சொல்லலாம் . போராட்டம் செய்தால் நாடே சுடுகாடாகிவிடும் என்று சொல்லலாம். ஆனால், போராட்டம் இல்லாமல் வாழ்க்கை அமைந்து விடாது.
இன்று நாம் சுதந்திர நாட்டில் இருக்கிறோம் என்று சொன்னால் அதற்காகப் போராடியவர்களை மறந்துவிடமுடியாது என்றார்.
நிகழ்ச்சியில், மத்திய முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, தமிழக முன்னாள் அமைச்சர் உ. மதிவாணன், கொரடாச்சேரி ஒன்றிய திமுக செயலாளர் சேகர்(எ) கலியபெருமாள், கல்லூரி இணைச் செயலாளர் கா. விஜயலெட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கல்லூரியின் நிறுவனர் மற்றும் செயலாளர் ரெ. காலைக்கதிரவன் வரவேற்றார். கல்லூரி முதல்வர் எஸ். மோகனா நன்றி கூறினார்.