Enable Javscript for better performance
ஜூன் 12-இல் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் வலியுறுத்தினார்.
    இதுதொடர்பாக, திருவாரூரில் செய்தியாளர்களுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டி:
      இடைத்தேர்தல்களில் பாஜக தோற்றிருப்பது, அவர்களின் 4 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் அதிருப்திக்கு உள்ளானதைக் காட்டுகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை அமைக்கப்படவில்லை. காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடியில்லை. இந்தாண்டு ஜுன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படாவிட்டால் 5 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி பாதிப்படையும். காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக அமைக்க  மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு திசை திருப்பும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது.
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திட்டமிட்டு, கொடூரமான முறையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க வேண்டும். இதை வலியுறுத்தியும், இந்த சம்பவத்துக்கு தமிழக அரசு முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என வலியுறுத்தியும் திமுக சட்டப் பேரவையை புறக்கணித்துள்ளது சரியான நடவடிக்கை. மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் அதிமுகவுக்கு ஆதரவாகப் பேசி திமுகவை குற்றம் சாட்டிவருகிறார். ரஜினி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து கருத்து தெரிவித்திருப்பது மோசமானது. பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் ஆகியோர் போராட்டத்தை கொச்சைப்படுத்தி வருகின்றனர்.
    ரஜினி திரைப்படங்களில் போராட்டம் நடத்துவது போன்று நடித்து வருகிறார். ஆனால் நிஜ வாழ்க்கையில் போராட மறுக்கிறார். தற்போது மக்கள் போராட்டத்தின் மூலமாகத்தான் வெற்றி பெறுகின்றனர்.
    தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனை கைது செய்துள்ளது கருத்துரிமைக்கு எதிரான நடவடிக்கையாகும். அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
    100 நாள் வேலைத் திட்டம் தமிழகத்தில் சரிவர நடைபெறவில்லை. விவசாயத் தொழிலாளர்கள் நாடோடிகளாகவும், அநாதைகளாகவும் உள்ளனர். எனவே, இத்திட்டத்தின் நிதியை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai