சுடச்சுட

  

  ரயில்வேயில் ஆள்குறைப்பு நடவடிக்கையை கைவிட வலியுறுத்தல்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்

  By DIN  |   Published on : 02nd June 2018 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கணக்கர்களில் 65 சதவீதம் பேரை ரயில்வேதுறை ஆள்குறைப்பு செய்யும்  நடவடிக்கையை கைவிட வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
  இதுகுறித்து அந்த யூனியனின் துணைப் பொதுச் செயலர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை: 8,229 ரயில் நிலையங்கள், 2,905 முன்பதிவு மையங்கள், 5,799 சாதாரண பயணச் சீட்டு கவுன்டர்கள், சரக்கு கையாளும் 2,328  குட்செட்டுகள் மற்றும் 2,126 நிர்வாக சேவை முனையங்கள் மூலம் ரயில்வேக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வரவு செலவு கணக்கை சரிபார்க்கும் பணியை போக்குவரத்து பிரிவு கணக்காளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். கிழக்கு கடற்கரை ரயில்வே ஆண்டுக்கு ரூ.101 கோடி 43 லட்சம் வருவாய் கணக்கு பார்க்க ஒரு கணக்கர் வீதம் நியமித்துள்ளது. இத்துடன் ஊழியரின் பணிச்சுமை கணக்கிட  ரசீதுகள் எண்ணிக்கையும் சேர்த்துக் கொள்கிறது.  மற்ற ரயில்வேக்களும் இதே அளவுகோலை பயன்படுத்தி உடனடியாக ஆள்களை குறைக்க ரயில்வே வாரியம் வலியுறுத்தி உள்ளது.
  போக்குவரத்து வரவு-செலவு பிரிவில் மொத்தம் 6,117 கணக்கர் பணியிடங்கள் உள்ளன. இதில், 1,266 காலியிடங்களாகும்.  4,851 பேர் தற்போதுபணியாற்றி வருகிறார்கள். புதிய அளவுகோல்படி 2,117 பேர் போதுமென முடிவெடுத்துள்ளதால்  கணக்கர்களின் எண்ணிக்கையில் 4,000 பேரை ரயில்வே குறைக்கிறது. 
  இப்பிரிவில், தெற்கு ரயில்வேயில் 569 பணியிடங்கள் உள்ளன. 447 பேர் பணியாற்றி வருகிறார்கள். மற்றவை காலியிடங்கள். இந்த உத்தரவால் 173 பேருக்கு மட்டுமே வேலை என்பதால், 274 கணக்கர்கள் வேலை இழப்பார்கள். மாற்று பணிக்கு இவர்கள் இடம் மாற்றம் செய்யப்படுவார்கள். இதனால் பதவி உயர்வு வாய்ப்பு பறிபோவதோடு வேறு இடங்களுக்கு இவர்கள்குடிபெயற நேரிடும்.
  புதிய துல்லிய  கணக்கீடு முறையை ரயில்வே துறை நடப்பு நிதியாண்டு முதல் அமல்படுத்துகிறது. இதற்காக, 130 தணிக்கை படிப்பு (சிஏ) படித்த பட்டய கணக்கர்களை நியமித்து இருக்கிறது. கணக்கு வைக்கும் முறையை ரயில்வே வாரியம் முற்றிலும் மாற்றும். இச்சூழலில் கூடுதலாக கணக்கர்கள் தேவைப்படுவார்கள். மேலும், ரயில்வே வருவாய் தொடர்ந்து கூடி வருகிறது.
  எனவே, கணக்கர்களில் 65 சதவீதம் பேரை ரயில்வே ஆள்குறைப்பு செய்யும் நடவடிக்கையை கைவிட தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்துகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai