சுடச்சுட

  

  அரசிதழில் காவிரி மேலாண்மை ஆணையம்: அதிமுகவினர் கொண்டாட்டம்

  By DIN  |   Published on : 03rd June 2018 07:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்படுவது குறித்த அறிவிக்கையை அரசிதழில் மத்திய அரசு வெளியிட்டதை வரவேற்று, திருவாரூர் மற்றும் மன்னார்குடியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் சனிக்கிழமை கொண்டாடினர்.
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி பல ஆண்டுகள் நடைபெற்ற போராட்டத்தின் விளைவாக கடந்த 2007 - ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காவிரி நடுவர் மன்றத்தால் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகு, நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், இறுதித் தீர்ப்பின் அரசாணை கடந்த 2013 -ஆம் ஆண்டு அரசிதழில் வெளியிடப்பட்டது.
  பின்னர், கர்நாடக அரசு இறுதித் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இந்நிலையில், அண்மையில் உச்ச நீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியத்துக்கு இணையான அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கும் உத்தரவு மத்திய அரசிதழில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.
  திருவாரூரில்...
  இதனால், மகிழ்ச்சியடைந்த அதிமுகவினர், தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்து, திருவாரூர் பேருந்து நிலையத்தில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். மேலும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
  மன்னார்குடியில்...
  இதேபோல், மன்னார்குடி கோபாலசமுத்திரம் கீழவீதியில் உள்ள அதிமுக அலுவலகத்திலிருந்து அக்கட்சியினர் ஊர்வலமாக வந்து பேருந்து நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்து, பொதுமக்கள், வர்த்தகர்கள், பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.
  இதில் ஒன்றிய அதிமுக செயலர் கா. தமிழ்ச்செல்வம், பொதுக்குழு உறுப்பினர் எஸ். கலைவாணன், மன்னார்குடி கூட்டுறவு வங்கித் தலைவர் ஆர்.ஜி. குமார், ஜெ. பேரவை மாவட்டச் செயலர் பொன். வாசுகிராம் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.
  திருத்துறைப்பூண்டியில்...
  காவிரி மேலாண்மை ஆணையம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டதை வரவேற்று, திருத்துறைப்பூண்டியில் நகர அதிமுக செயலர் டி.ஜி. சண்முகசுந்தர் தலைமையில்,  அக்கட்சியினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai