சுடச்சுட

  

  திமுக-காங்கிரஸ் கூட்டணியா?; திமுக தலைமையில் கூட்டணியா?

  By சி. ராஜசேகரன்  |   Published on : 03rd June 2018 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூரில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற திமுக தலைவர் மு. கருணாநிதியின் 95- ஆவது பிறந்தநாள் கூட்டமானது, மு.க. ஸ்டாலின் தலைமையில் உருவாகப் போகும் புதிய அணியை உறுதி செய்யும் கூட்டமாகவே நடைபெற்றது.
  இந்த கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், மதிமுக பொதுச் செயலர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஆர். முத்தரசன், அகில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம். காதர்மொகிதீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா ஆகியோர் பங்கேற்றனர். இவர்களைத் தவிர சமத்துவ மக்கள் கட்சி, இந்திய சமூக நீதி இயக்கம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர்.
  கருணாநிதியின் பிறந்தநாள் விழா எனக் கூறப்பட்டாலும், ஸ்டாலின் தலைமையில் எதிர்வரும் தேர்தலை சந்திப்பதற்காக  உருவாகும் புதிய அணி என்பதை மெய்ப்பிக்கும் வகையிலேயே, கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பேசினர். இதை முத்தரசன் தொடங்கி வைத்தார். அவர் பேசும்போது, ஸ்டாலின் சட்டப் பேரவை கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்றும், ஸ்டாலின் தலைமையில் இங்கிருக்கும் தலைவர்கள் அணி திரள்வோம் என்றும் கூறினார். அடுத்து பேசிய காதர் மொகிதீன் இதை ஆமோதிப்பதாகக் கூறினார். 
  இதற்கெல்லாம் ஒருபடி மேலேபோன விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ஸ்டாலினை முதல்வராக்குவோம் என்றார். மேலும், ஸ்டாலின் தலைமையை பேராசிரியர் ஏற்றுக் கொண்டுள்ளார், திமுகவிலிருந்து பிரிந்து சென்ற வைகோ அங்கீகரித்திருக்கிறார். எனவே, ஸ்டாலின் முதல்வராவதை வழிமொழிகிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி என்றார்.
  தொடர்ந்து, வைகோ பேசுகையில், புதிதாக வருபவர்களெல்லாம் முதல்வர் நாற்காலி கனவோடு வருகிறார்கள். அவர்கள் ஊடகங்களின் 8 கால செய்திகளுக்கு பயன்படலாம். ஆனால், முதல்வர் நாற்காலிக்குப் பொருத்தமானவர் மு.க. ஸ்டாலின் ஒருவரே.  2004- இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி முக்கியப் பங்காற்றியதைப்போல, தேசிய அரசியலை தீர்மானிக்கிற சக்தியாக ஸ்டாலின் இருப்பார் என்றார்.
   இதேபோல், இந்த கூட்டத்தில் பேசிய அனைத்து தலைவர்களும், கருணாநிதியை பெயரளவில் பாராட்டி விட்டு, ஸ்டாலினை உயர்த்திப் பிடித்துப் பேசினர். எனவே, இந்த கூட்டம் ஸ்டாலினை முதல்வராக்குவதற்காக ஒன்று திரண்டு பேசும் தலைவர்களின் கூட்டமாகவே இருந்தது. 
  ஆனால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் சு. திருநாவுக்கரசர், கருணாநிதியைப் பற்றி மட்டுமே பேசினார். ஸ்டாலின் தொடர்பாகவோ, கூட்டணி தொடர்பாகவோ, ஸ்டாலின் பின்னால் அணிவகுப்போம் என்றோ பேசவில்லை. மேலும் சட்டப் பேரவையில் ஸ்டாலின் பங்கேற்க வேண்டும் என்றும் வலியுறுத்திப் பேசினார். 
   கடைசியாக அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும், அதற்கு ஸ்டாலின் கதாநாயகனாக இருப்பார், மத்தியில் ராகுல் காந்தி கதாநாயகனாக செயல்படுவார் என்று ஒற்றை வரியில் முடித்தார்.   ஆனால், ஸ்டாலின் தலைமையில் புதிய அணியில் காங்கிரஸ் இருக்குமா, ஸ்டாலின் தலைமை ஏற்கப்படுமா என்பது குறித்து அவர் மறந்தும் வாய் திறக்கவில்லை. 
   எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா என்பது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவும் இந்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி இது குறித்து எதுவும் பதிலளிக்கவில்லை.   நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடனான அணியில் யார் இருப்பார்கள் என்பதை தெளிவுபடுத்துவதற்கான கூட்டமாக திருவாரூர் கூட்டம் இருந்தது. திமுக-காங்கிரஸ் கூட்டணியா அல்லது திமுக தலைமையிலான அணியா என்பது கூடிய விரைவில் தெரியும் என்பது அரசியல் விமர்சகர்களின் கருத்து.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai