Enable Javscript for better performance
நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடியில் விவசாயிகள்- Dinamani

சுடச்சுட

    

    நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடியில் விவசாயிகள்

    By DIN  |   Published on : 05th June 2018 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, சாகுபடியை மேற்கொள்ள வசதியாக மேட்டூர் அணையிலிருந்து விரைவில் தண்ணீர் திறந்துவிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    காவிரி டெல்டா பகுதியில் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக குறுவை சாகுபடி பொய்த்துப்போன நிலையில், கடந்தாண்டு மேட்டூர் அணையிலிருந்து காலதாமதமாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
    இந்நிலையில், நிகழாண்டு டெல்டா பகுதிகளில் குறுவை சாகுபடிக்கான பருவ காலம் தொடங்கிய நிலையில், மேட்டூர் அணையில் தண்ணீர் குறைவாக உள்ளதால், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், கர்நாடகத்திலிருந்து உரிய தண்ணீரை பெற்றுத்தர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் போராடிவருகின்றன.
    இதற்கிடையில், திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் நிகழாண்டு குறுவை சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். நிலத்தடி நீர் மூலம் நாற்றுவிடுதல், நாற்றுப்பறித்தல், நடவு போன்ற பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
    குடவாசல் வட்டத்தில் குறிப்பாக எரவாஞ்சேரி, திருவீழிமிழலை, மணக்கால் அய்யம்பேட்டை, கீரங்குடி, பெரும்பண்ணையூர் உள்ளிட்ட பல இடங்களில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
    இதுகுறித்து, குடவாசல் வேளாண்மை உதவி இயக்குநர் பன்னீர் செல்வம் கூறியது:
    குடவாசல் வட்டத்தில் நிலத்தடி நீர் மூலம் இதுவரை ஆயிரத்து 150 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இன்னும் சில வாரங்களில் இதன் பரப்பளவு அதிகரிக்கும் என்றார்.
    இதுகுறித்து குடவாசல் வட்டம், எரவாஞ்சேரியைச் சேர்ந்த நாராயணசாமி கூறியது:
    மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க காலதாமதமாகும் நிலையில், நிலத்தடிநீர் மூலம் சம்பா சாகுபடியை தொடங்கியுள்ளோம். இருப்பினும், நிலத்தடி நீரை மட்டும் நம்பி சாகுபடியை நிறைவுசெய்ய முடியாது. எனவே, கர்நாடகத்திடமிருந்து தமிழகத்துக்குரிய தண்ணீரைப் பெற்று, மேட்டூர் அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai