சுடச்சுட

  

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே இருவேறு சமூகத்தினரிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், தொடர்புடைய 5 பேர் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
  திருமக்கோட்டையை அடுத்த வல்லூர் நடுத்தெருவில் ஒரு சமூகத்தினருக்குச் சொந்தமான முன்னடியான் கோவில் உள்ளது. இக்கோயிலில் திருவிழா நடைபெற இருப்பதால், அதைத் தூய்மைப்படுத்தும் பணியில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோயிலுக்குத் தேவையான பொருள்களை வாங்கிக்கொண்டு முருகன் மகன் பிரதீப் (16), இருசக்கர வாகனத்தில் வந்தாராம்.
  இந்நிலையில், நடுத்தெருவில் நின்றுகொண்டிருந்த மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த செ. கணேஷ் (22) என்பவர்,பிரதீப்பை வழிமறித்து குறுகலான தெருவில் இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டிச் செல்லக்கூடாது என கண்டித்தாராம். இதன் காரணமாக இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதையடுத்து, அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனராம்.
  இதையடுத்து, அன்று இரவு கணேஷ், தனது சமூகத்தினர் 10-க்கும் மேற்பட்டோரை அழைத்துக் கொண்டு, முன்னடியான்கோயிலுக்குச் சென்று பிரச்னை குறித்து பேசினார். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த கணேஷ் தரப்பினர், உருட்டைக் கட்டையால் பிரதீப் தரப்பினரை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்களாம்.
  இதுகுறித்து திருமக்கோட்டை காவல் நிலையத்தில் பிரதீப் அளித்த புகாரின்பேரில், தீண்டாமை தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸார் வழக்குப் பதிந்து, செ. கணேஷ் (22), ஜெ. ராஜகுரு (18), ஜெ. சூரியா (18), மு. பிரபாகரன் (18), தச்சன்வயலைச் சேர்ந்த த. அன்பரசன் (17) ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் சிலரைத் தேடிவருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai