சுடச்சுட

  

  ஜூன் 9-இல் சென்னையில் நடைபெறும் மாநில திறன் மாநாட்டில் பங்கேற்க அழைப்பு

  By DIN  |   Published on : 06th June 2018 06:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னையில் ஜூன் 9 -இல் தொடங்கும் மாநில திறன் மாநாட்டில் பங்கேற்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  சென்னையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம்  சார்பில் மாநில திறன் மாநாடு  ஜூன் 9 மற்றும் 10  ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை தொழிலாளர் நலத்துறை அமைச்சர்  தொடங்கி வைக்கிறார். இந்த மாநாட்டில்  மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற போட்டியாளர்களின் திறன் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படும்.
  வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அலுவலர்கள், பல்வேறு தொழில் கூட்டமைப்புகள் செக்டார் ஸ்கில் கவுன்சில் உறுப்பினர்கள் ஆகியோர் கொண்ட குழு இத்திறன் படைப்புகளை மதிப்பீடு செய்யும். இதில் தேர்வு செய்யப்படும் படைப்புகளுக்கு முதல் பரிசாக ரூ. 1,00,000, இரண்டாம் பரிசாக ரூ. 50,000 வழங்கப்படும். மேலும், தொழில் நிறுவனங்களின் படைப்புகளும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் திறன் பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்த பதாகைகளும் இம்மாநாட்டில் காட்சிப்படுத்தப்படும்.
  தமிழ்நாட்டின் திறன் சூழல், திறன் முனைப்புகள் மற்றும் வாய்ப்புகள்,   உலக அளவிலான திறன் பயிற்சி குறித்த சிறந்த நடைமுறைகள் ஆகிய தலைப்புகளில் துறை வல்லுநர்களைக் கொண்டு கருத்தரங்கங்களும் நடத்தப்படும்.
  இந்த மாநாட்டைத் தொடர்ந்து, ஜூன் 11 மற்றும்  12  ஆகிய  தினங்களில் தனித்திறன் தேடும் நிகழ்வு  நடைபெறும். இதுதொடர்பான நிகழ்வுகள் அரசு தொழிற்பயிற்சி நிலையம்,  கிண்டி,  அம்பத்தூர் மற்றும் அட்வான்ஸ்டு டிரெயினிங் நிறுவனம் - கிண்டி ஆகிய  இடங்களில் நடத்தப்படும்.  இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 1997 ஜன 1 -ஆம் தேதியோ அல்லது அதற்குப் பிறகோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
  திறன் தேடலில் பங்கேற்க விரும்பும் தகுதியான நபர்கள் w‌w‌w.‌t‌n‌s‌k‌i‌l‌l‌s‌h‌u‌n‌t.‌i‌n  என்னும் இணையதளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
  ஏற்கெனவே மாவட்ட அளவில் நடைபெற்ற திறன் போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தகுதியானவர்கள் தனித்திறன் தேடலில் நேரடியாக பங்கேற்கலாம். மாநில அளவில் நடத்தப்படும் இத்தனித்திறன் தேடலில் தேர்ந்தெடுக்கப்படுவோர் ஜூன் 21 முதல்  23 வரை பெங்களூருவில் நடைபெறும் மண்டல அளவிலான திறன் போட்டியிலும் மற்றும் ஜூலையில் புதுதில்லியில்  நடைபெறும் தேசிய அளவிலான திறன் போட்டியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என செய்திக் குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai