சுடச்சுட

  

  கூத்தாநல்லூர் காவல் நிலையம் முன் பொதுமக்கள் சாலை மறியல்

  By DIN  |   Published on : 07th June 2018 01:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் காவல் நிலையம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், புதன்கிழமை இரவு பரபரப்பு ஏற்பட்டது.
  கூத்தாநல்லூரை அடுத்த சின்னக் கூத்தாநல்லூரைச் சேர்ந்தவர் எஸ். பாஸ்கர் (48). இவர் தட்டு ரிக்ஷா ஓட்டி வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த வின்சென்ட் (38) மதுபோதையில், தகராறு செய்ததுடன், தகாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார். இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீஸில் பாஸ்கர் புகார் கொடுத்துள்ளார்.
  இது மட்டுமன்றி, லெட்சுமாங்குடி, மருத்துவமனை சாலையைச் சேர்ந்த ஜார்ஜ் என்பவரின் மனைவி செல்வி (42), கணவருடன் வீட்டில் இருந்தபோது, வின்சென்ட் அவரை அவதூறாகப் பேசி மிரட்டினாராம். இதுதொடர்பாக வின்சென்ட் மீது போலீஸில் செல்வி புகார் அளித்தார். இந்த இரு புகார்களின்பேரில், காவல் உதவி ஆய்வாளர் எஸ். கார்த்திக் மற்றும் போலீஸார் வழக்குப் பதிந்து, வின்சென்டை கைது செய்தனர். இந்நிலையில், கூத்தாநல்லூர் நகர அதிமுக செயலாளர் டி.எம். பஷீர் அகமது காவல் நிலையத்தில் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார்.
  அப்போது, காவல் நிலையம் முன்பு திருவாரூர்- மன்னார்குடி பிரதான சாலையில், சின்னக் கூத்தாநல்லூரைச் சேர்ந்த பொதுமக்கள், திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். வின்சென்டை கைது செய்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினர். 
  இதையறிந்து வந்த நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அருண், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களைக் கலைந்து போகச் செய்தார். சாலை மறியல் காரணமாக திருவாரூர்- மன்னார்குடி பிரதான சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai