ஜூன் 11 முதல் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பம் விநியோகம்
By DIN | Published on : 07th June 2018 01:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் வழங்கப்படவுள்ளன என மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19-ஆம் ஆண்டுக்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் 18 வரை வழங்கப்பட உள்ளன . மாநில அரசுக்கு 85 இடங்களும், மத்திய அரசுக்கு 15 இடங்களும் என மொத்தம் 100 இடங்களைக் கொண்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்த விண்ணப்பப் படிவங்கள் ஞாயிறு உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும்.
இதைப் பெறுவதற்கு பொதுப்பிரிவினர், செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரியில் மாற்றத்தக்க வகையில், ரூ.500-க்கான வரைவோலை அளிக்க வேண்டும. தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சான்றொப்பம் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ் 2 நகல் மற்றும் நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆகியவை வழங்கினால் இலவசமாக விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், எண் 162, பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரியில் ஜூன் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.