ஊதியக்குழு முரண்பாடுகளைக் களையக் கோரி அரசு பணியாளர்கள் உண்ணாவிரதம்
By DIN | Published on : 09th June 2018 07:02 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஊதியக்குழு முரண்பாடுகளை சரி செய்யக் கோரி, திருவாரூரில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மத்திய அரசு பணியாளர்களுக்கு இணையான அனைத்துப் படிகள், போனஸ் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 5ஆயிரம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். ஊதியக்குழு முரண்பாடுகளை களைய வேண்டும்.
பொது விநியோகத் திட்ட பணியாளர்களுக்கு டிஎன்சிஎஸ்சி-க்கு இணையான ஊதியம் வழங்கி, ரத்து செய்யப்பட்ட ஊக்கத் தொகையை மீண்டும் வழங்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்த வேண்டும். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்து,
சலுகைகள் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். பணி நியமனம், இட மாறுதல், பதவி உயர்வு ஆகியவற்றில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவாரூர் ரயில் நிலையம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்துக்கு சங்க மாநிலச் செயலாளர் பூபதி தலைமை வகித்தார். நாகை மாவட்டத் தலைவர் சாமிநாதன், திருவாரூர் மாவட்டத் தலைவர் முருகானந்தம், செயலாளர் ராஜா, பொருளாளர் ஈஸ்வரன், தஞ்சை மாவட்டத் தலைவர் வெங்கடாசலம், மாநிலத் தலைவர் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.