சுடச்சுட

  

  ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும்: தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தல் 

  By DIN  |   Published on : 09th June 2018 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை முக்கிய சந்திப்புகள், சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் உள்ள அனைத்து ரயில் நிலையங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் வலியுறுத்தியுள்ளது.
  இது தொடர்பாக தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் துணைப் பொதுச் செயலாளர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை:
  வழிதவறிய, குடும்பத்தினரால் கைவிடப்பட்ட, கடத்தப்பட்ட மற்றும் சூழ்நிலையால் வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவர், சிறுமியர் நாடு முழுவதும் பல்வேறு ரயில் நிலையங்களில் ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரிகிறார்கள். மேலும், இவர்கள் இளம் குற்றவாளிகளாக மாறுவது அதிகரித்து வருகிறது. சிறார்கள் நீதி (அக்கறை மற்றும் பாதுகாப்பு ) சட்டத்தின்கீழ், 2016-ஆம் ஆண்டு இளம் குற்றவாளிகள் மீது ரயில்வே போலீஸார் நாடு முழுவதும் 312 வழக்குகள் பதிவு செய்தனர். இதில், அதிகப்படியாக தமிழகத்தில் 209 வழக்குகள் பதிவாயின. ரயில் நிலையங்களில் சுற்றித் திரியும் சிறாரை மீட்க தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ரயில்வேக்கு கையேடு வழங்கி இருக்கிறது. ரயில்வே வாரிய தலைவர் அஸ்வினி லொகானி இந்த கையேட்டை இணைத்து, குழந்தைகளைக் காக்க விரிவான  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து பொது மற்றும் கோட்ட மேலாளர்களுக்கு கடந்த ஜூன் 4 -ஆம் தேதி கடிதம் எழுதினார். ரயில்வே துறை கடந்த 2015-ஆம் ஆண்டு வகுத்த ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் தற்போது 88 ரயில் நிலையங்களில் நடைமுறையில் உள்ளது. இது மேலும் 35 ரயில் நிலையங்களில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் கடந்த 2016-ஆம் ஆண்டில் 15,379 பேர் கடத்தப்பட்டிருக்கின்றனர். இதில், 58.7 சதவீதம் பேர் குழந்தைகள் என தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறுகிறது. சராசரியாக ஒவ்வொரு 5 நிமிட இடைவெளியிலும், ரயில்வே எல்லைக்கு ஓர் குழந்தை ஆதரவற்ற நிலையில் வந்து சேர்கிறது. எனவே, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தை முக்கிய சந்திப்புகள், சுற்றுலா மற்றும் ஆன்மிக தலங்கள் உள்ள ரயில் நிலையங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai