Enable Javscript for better performance
ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வுக் கூட்டம்

    By DIN  |   Published on : 09th June 2018 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்துக்குள்பட்ட சுவாமி தயானந்த சரஸ்வதி கல்லூரியில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் திறனூட்டல் பயிற்சி ஆய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலர் தென்காசி சு. ஜவஹர் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் இல. நிர்மலராஜ் முன்னிலை வகித்தார். இதில், தென்காசி சு. ஜவஹர் பேசியது:
    நிதி மேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மை ஆகியவற்றை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக தனியார் நிறுவனம் ஒன்று தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ், அரசின் வருவாயை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால், அரசின் நிகழ்நேர வரவை உடனுக்குடன் அறிய இயலும்.
    இத்திட்டத்தின் மூலம் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு ஊதியப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இப்பணி அக்டோபர் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணியில் சேர்ந்த நாள் முதல் ஓய்வுபெறும் நாள் வரை உள்ள அரசுப் பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது.
    பணிப்பதிவேடுகள் அவ்வப்போது கணினி மூலம் ஆய்வு செய்யப்படுவதால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். ஆதாரப்பூர்வமான பணி விவரங்கள் கணினியில் இருப்பதால் பணிமாற்ற முடிவுகள் தாமதமின்றி முறையாக எடுக்கப்படும்.
    இத்திட்டத்தின்கீழ், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 16,911 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகளைக் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன. ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ், சிகிச்சை பெற 726 மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. தற்போது இந்த எண்ணிக்கை 805 மருத்துவமனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்ட தலைநகரங்களில் அமையப் பெற்றுள்ள மருத்துவமனைகள் மட்டுமல்லாது, தாலுகா தலைமையிடங்களில் உள்ள மருத்துவமனைகளும் சேர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 1,90,502 பேர் ரூ.549.03 கோடி செலவில் மருத்துவ சலுகையைப் பெற்றுள்ளனர்.
    கடந்த 2017-18-ஆம் நிதியாண்டில், திருவாரூர் மாவட்டத்தில் ரூ. 239 கோடி ஓய்வூதியமாகவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.587 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசின் வரவினமாக இந்நிதியாண்டில் மட்டும் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.270 கோடி அரசுக் கணக்கில் கருவூலங்கள் வழியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்த அரசு அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என்றார் அவர்.
    இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்லூயிஸ், மாவட்ட வன அலுவலர் கே. அறிவொளி, மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கூடுதல் இயக்குநர் எ.பி. மகாபாரதி, மண்டல இணை இயக்குநர் எஸ். செல்வசேகர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம், சுவாமி தயானந்த சரஸ்வதி கல்வி நிறுவனங்கள் தாளாளர் சீனிவாசன், மாவட்ட  கருவூல அலுவலர் ஜி.ஆர். லலிதா உள்ளிட்ட  அரசு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்;.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai