சுடச்சுட

    

    திருவாரூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இல.நிர்மல்ராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
    திருவாரூர் மாவட்டத்தில் அரசு இசைப் பள்ளி வாசன் நகரில் இயங்கி வருகிறது.  தமிழக அரசின் கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் இந்த இசைப் பள்ளியில் குரலிசை,  நாகசுவரம், தவில், தேவாரம்,  பரதநாட்டியம், வயலின் மற்றும் மிருதங்கம் ஆகிய கலைகள் 3 ஆண்டு முழு நேரப் பயிற்சியாக அளிக்கப்பட்டு, தமிழக அரசின் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.  இப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு அரசு விதிகளின்படி இலவச விடுதி வசதி,  கல்வி உதவித் தொகை,  இலவசப் பேருந்து கட்டண சலுகைகள் மற்றும் மாதந்தோறும் கல்வி ஊக்கத்தொகை ரூ.700 வழங்கப்படும். இப்பள்ளியில் சேர்வதற்கு 12 முதல் 25 வயதிற்குள்பட்டவராக இருக்க வேண்டும்.  குரலிசை,  பரதநாட்டியம்,  வயலின்,  மிருதங்கம் ஆகிய கலைகளுக்கு 7-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.  நாகசுவரம்,  தவில்,  தேவாரம் ஆகிய கலைகளுக்கு தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானது.  ஆண்டு ஒன்றுக்கு கல்விக் கட்டணம் ரூ. 152 செலுத்த வேண்டும். மாணவ,  மாணவிகள் சேர்க்கை   ஜூன் 1 முதல்  நடைபெற்று வருகிறது.  ஆண் மற்றும் பெண் இருபாலரும் இப்பயிற்சியில் சேரலாம்.  தகுதியுடைய நபர்கள் மேலும் விவரங்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர்,  மாவட்ட அரசு இசைப்பள்ளி,  திருவாரூர் என்ற முகவரியில் அணுகி தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai