சுடச்சுட

  

  சட்டப் பேரவை முற்றுகைப் போராட்டத்தில்  திரளாகப் பங்கேற்க மாணவர் பெருமன்றம் முடிவு

  By DIN  |   Published on : 10th June 2018 01:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி ஜூன் 22- ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப் பேரவை முற்றுகைப் போராட்டத்தில், திருவாரூர் மாவட்டத்திலிருந்து திரளான மாணவர்கள் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
  திருவாரூரில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் மாவட்டக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதன் மாவட்டக் குழு உறுப்பினர் சு. பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். மாணவர் பெருமன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரை. அருள்ராஜன் எதிர்கால இயக்கங்கள் குறித்துப் பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகள் எஸ். பாலமுருகன், பி. ராஜபாண்டி, எஸ். ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  தீர்மானங்கள்: கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வியை பறிக்கக் கூடிய நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்களிக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை காரணம் காட்டி, தொடக்கப் பள்ளிகளை மூடும் நிலையை கைவிட வேண்டும். அரசுப் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் உடனடியாக நிரப்ப வேண்டும். கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதுடன், மாணவர்களின் கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்.
  சுயநிதி கல்வி நிறுவனங்களில் பயிலும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிட மாணவர்களின் கல்விக் கட்டணங்கள் அனைத்தையும் அரசே ஏற்கும் என்ற தமிழ்நாடு அரசாணையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைவருக்கும் தாய்மொழியில் கட்டாய இலவசக் கல்வி வழங்க வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர் விடுதிகளை சுகாதார வசதிகளோடு பராமரித்து, தனியார் பள்ளி, கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை காலம் தாழ்த்தாமல் கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 22- ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப் பேரவை முற்றுகைப் போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்திலிருந்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai