Enable Javscript for better performance
தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் பாஜகவும், காங்கிரசும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் செயல்படுகிறது- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் பாஜகவும், காங்கிரசும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் செயல்படுகிறது

    By DIN  |   Published on : 11th June 2018 05:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்துக்கு தண்ணீர் கொடுப்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் செயல்படுவதாக தமாகா தலைவர் ஜி.கே. வாசன்  கூறினார்.
    திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகேயுள்ள வேம்பனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமாகா மாவட்டத் தலைவர் குடவாசல் எஸ். தினகரன் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஜி.கே.வாசன், பின்னர் செய்தியாளர்களிடம்  கூறியது: 
    தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டும் இந்திய அளவில் எந்தவொரு பிரச்னையிலும் எதிரும் புதிருமாக இருக்கிறது.  ஆனால், தமிழகத்துக்கு சட்டப்படி தண்ணீர் கொடுப்பதற்கு மட்டும் இரு கட்சிகளும் இரட்டைக்குழல் துப்பாக்கிபோல் செயல்படுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு தங்கள் மாநிலம் சார்பில் உறுப்பினர்களை நியமிக்காமல் கர்நாடக அரசு திட்டமிட்டு காலம்தாழ்த்துகிறது. ஆணையத்துக்கு நிரந்தரத் தலைவர் தேவை. 
    காவிரியில் தண்ணீர் பெற தமிழக அரசு உரிய நேரத்தில் அழுத்தம் கொடுக்கத் தவறிவிட்டது. 7 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி வீணாகாமலிருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிப்பதுடன் வேளாண் மண்டலமாகவும் அறிவிக்க மத்திய அரசு முன்வரவேண்டும்.  மூடப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.  தமிழக அரசு விவசாயிகளுக்கு பல சலுகைகள் அறிவித்தாலும்,  அவை உடனடியாக அமலுக்கு வரவேண்டும். விவசாயிகளுக்கு வங்கிக் கடன்களை ரத்து செய்துவிட்டு, அவர்களுக்கு புதிய கடன் வழங்க வேண்டும்.
    நீட் தேர்வு குழப்பத்தில் ஆரம்பித்து, அதிலேயே முடிந்துள்ளது.  மாணவர்கள் தற்கொலை முடிவை எடுக்கக் கூடாது என்றார்.
    பேட்டியின்போது, தமாகா மாவட்டத் தலைவர்கள் ஜிர்ஜிஸ், குடவாசல் எஸ். தினகரன், முன்னாள் எம்எல்ஏ ரெங்கராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai