Enable Javscript for better performance
தமிழக அரசு மத்திய அரசின் கிளை அலுவலகமாக செயல்படுகிறது: டி.டி.வி. தினகரன்- Dinamani

சுடச்சுட

  

  தமிழக அரசு மத்திய அரசின் கிளை அலுவலகமாக செயல்படுகிறது: டி.டி.வி. தினகரன்

  By DIN  |   Published on : 11th June 2018 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழக அரசு மத்திய அரசின் கிளை அலுவலகமாக செயல்படுகிறது என அமமுக துணைப் பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் கூறினார்.
   திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் இல்ல நிகழ்ச்சிகளில் பங்கேற்ற டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறியது:
  மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரின் போது, 110 விதியின் கீழ் பல்வேறு திட்டங்களை அறிவித்து, வெற்றிகரமாக செயல்படுத்தி வந்தார். ஆனால், தற்போது நடைபெறும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு ஜூன்12-ஆம் தேதி தண்ணீர் திறந்துவிட முடியாது என, செயல்படுத்த முடியாத திட்டத்தை 110 விதியின் கீழ் அறிவிக்கும் வினோத முதல்வராக உள்ளார்.
   மத்திய அரசுக்கு, தேவையான அழுத்தம் தந்து மேலாண்மை ஆணையத்தை முழுமையாக அமைத்து, ஒழுங்காற்றுக் குழுவை ஏற்படுத்தி, காவிரியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமையை பெற்றுத்தர வேண்டிய தமிழக அரசு, அவ்வாறு செயல்படாமல் மத்திய அரசின் கிளை அலுவலகம் போல் செயல்பட்டு வருகிறது. இதனால், காவிரி நதி உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளிலும் தமிழகத்தின் உரிமையை முழுமையாக இழந்து வருகிறோம்.
   தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் வழக்கில் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக இருக்க வேண்டும் என கட்சியினர் நினைப்பது போன்று, எங்களின் எதிர்பார்ப்பும் உள்ளது. இந்த 18 எம்.எல்.ஏ.க்களும் கட்சிக்காக தியாகம் செய்துள்ளனர். அவர்கள் அதிருப்தி அடைந்திருப்பதாக வரும் தகவலில் துளியும் உண்மை இல்லை. 
  கருணாநிதியை எதிரியாகப் பார்க்கக் கூடாது: கடந்த மே 27-ஆம் தேதி கட்சி தலைமை அலுவலகம் திறப்பு விழா நடைபெறுவதாக முடிவு எடுத்திருந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் காரணமாக, ஜூன் 3-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதன் பின்னர்தான் அன்று திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாள் என தெரியவந்தது. இதனை சிலர் அரசியலாக்கி வருகின்றனர். அவர்களுக்கு நான் சொல்லும் பதில், கருணாநிதி அரசியலில் வெற்றி பெற்ற தலைவர், அனைவரும் மதிக்கும் தலைவர், அவர் நம்முடைய எதிர்க் கட்சிக்காரர் என்பதால் எதிரியாகப் பார்க்கக் கூடாது. அவர் பிறந்த நாளில் கட்சி அலுவலகம் திறப்பதில் தவறேதும் இல்லை.
  காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி, விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிவித்திருந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. ஆனாலும், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர். இப்போராட்டத்தில் நான் கலந்துகொள்வேன் என்றார்.
   பேட்டியின் போது, அமமுக மாநிலப் பொருளாளர் என். ரெங்கசாமி, திருவாரூர் மாவட்டச் செயலர் எஸ். காமராஜ், மாநில வழக்குரைஞர் அணி தலைவர் கு. சீனிவாசன், மாநில அமைப்புச் செயலர் சிவா. ராஜமாணிக்கம், ஒன்றியச் செயலர் க.அசோகன், நகரச் செயலர் ஆ. ஆனந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai