சுடச்சுட

  

  திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் விநியோகிக்கப்படுகின்றன.
  தமிழகம் முழுவதும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை முதல் வழங்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் உள்ள 23 அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படும் என மருத்துவக் கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்திருந்தது.
  திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 2018-19 ஆம் ஆண்டுக்கான எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ஜூன் 11 முதல் 18 வரை வழங்கப்படும் எனவும் மாநில அரசுக்கு 85 இடங்களும், மத்திய அரசுக்கு 15 இடங்களும் என மொத்தம் 100 இடங்களைக் கொண்ட திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இந்த விண்ணப்பப் படிவங்கள் ஞாயிறுக்கிழமை உள்பட அனைத்து நாள்களிலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
  அதன்படி, திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. மருத்துவக் கல்லூரி முதல்வர் அழ. மீனாட்சி சுந்தரம் விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தார். அரசு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் விண்ணப்பத்தை வாங்க ஏராளமான மாணவ, மாணவிகள் வந்திருந்தனர்.
  இந்த விண்ணப்பங்களை பெறுவதற்கு பொதுப்பிரிவினர், செயலாளர், தேர்வுக் குழு, கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரியில் மாற்றத்தக்க வகையில், ரூ.500-க்கான வரைவோலை அளிக்க வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், சான்றொப்பம் பெறப்பட்ட சாதிச் சான்றிதழ் 2 நகல் மற்றும் நீட் தேர்வு மதிப்பெண் பட்டியல் ஆகியவை வழங்கினால் இலவசமாக விண்ணப்பங்கள் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
  அதன்படி, அரசு கல்லூரி இடஒதுக்கீட்டு இடங்களுக்கென 130, தனியார் கல்லூரிகளில் அரசு இட ஒதுக்கீட்டு இடங்களுக்கென 52, தனியார் கல்லூரி இட ஒதுக்கீட்டு இடங்களுக்கென 95 என மொத்தம் 277 விண்ணப்பங்கள் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டன.
  பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக் குழு, மருத்துவக் கல்வி இயக்ககம், எண் 162, பெரியார் சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை- 10 என்ற முகவரியில் ஜூன் 19-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai