சுடச்சுட

  

  மன்னார்குடி ஜெயங்கொண்டநாதர் கோயிலில் திரட்டுப்பால் ஆராதனை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  ஜெயங்கொண்டநாதர் கோயிலில் ஆண்டுதோறும் பௌர்ணமி நாள் இரவிலும், வைகாசி மாதம் ரோகிணி நட்சத்திர நாளில் வியாசர் லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். வைகாசி மாதம் நடைபெறும் பூஜை நிகழ்ச்சியில், சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் திரட்டுப்பால் ஆராதனை விழா நடைபெறும். நிகழாண்டிற்கான விழா செவ்வாய்க்கிமை நடைபெற்றது.
  கோபாலர், கோபியர்களுடன் ஜலகிரீடை செய்ததால், ஏற்பட்ட களைப்பை போக்கிக்கொள்ள ஓய்வு எடுத்துக்கொண்டிருக்கும் போதெல்லாம், ஜெயகொண்டநாதர், திரட்டுப்பாலை தயாரித்து கோபாலனுக்கு அனுப்பி வந்ததாக கூறப்படும் புராணப்படி இந்த விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மாலையில் பால், ஏலக்காய்,ஜாதிக் காய், கிராம்பு, திராட்சை, வெல்லம், குங்குமப்பூ ஆகியவற்றை ஒன்றாக கலந்து அவற்றை வெள்ளிக்குடத்தில் விட்டு,வியாசர் லிங்கம் முன்பாக வைக்கப்பட்டது.
  அப்போது, வைணவ தலமான மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலிருந்து தீட்சிதர்கள் வந்து, ஜெயங்கொண்டநாதர் கோயில் வியாசர் லிங்கத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதைத் தொடர்ந்து, வைணவ முறைப்படி குங்குமமும், சைவ முறைப்படி திருநீறும் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர், ராஜகோபால சுவாமி கோயில் யானை செங்கம்மால் மீது திரட்டுப்பால் அடங்கிய வெள்ளிக்குடத்தை தீட்சிதர்கள் வைத்து, நகரின் முக்கிய வீதிகள் வழியாக ராஜகோபாலசுவாமி கோயிலை வந்தடைந்தனர். அங்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பின்னர், திரண்டிருந்த பக்தர்களுக்கு திரட்டுப்பால் பிரசாதம் வழங்கப்பட்டது. 
  விழாவுக்கான ஏற்பாடுகளை சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai