சுடச்சுட

  

  தரமான நெல் விதைகளை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெற ஆலோசனை

  By DIN  |   Published on : 13th June 2018 07:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தரமான நெல் விதைகள் தேர்வு செய்து, அதை சரியான முறையில் விதை நேர்த்தி செய்து பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம் என்று நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் ராஜா.ரமேஷ், ஆ. பாஸ்கரன் ஆகியோர் ஆலோசனை தெரிவித்துள்ளனர். 
  இதுகுறித்து அவர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை: தரமான நெல் விதைகளை தேர்வு செய்து பயன்படுத்துதல் மற்றும் விதை நேர்த்தி செய்து விதைப்பதால்  நல்ல வாளிப்பான, பூச்சி மற்றும் நோய்கள் தாக்காத நாற்றுகளைப் பெறலாம். 
  தரமான நெல் விதைகளைத் தேர்வு செய்யும் முறை: விதைகளின் முளைப்புத் திறன் 80 சதவீதத்துக்கு மேல் இருக்க வேண்டும். அதற்கு சான்று பெற்ற விதைகளை பயன்படுத்த வேண்டும். நமது வயலில் அறுவடை செய்து  விதைகளைப் பயன்படுத்தும்போது, விதைகளை 1.2 சத உப்பு நீரில் அதாவது 3 கிலோ கல் உப்பை 18 லிட்டர் தண்ணீரில் கரைத்து அதில் விதைகளை இட்டு, பின்பு உப்புக் கரைசலில் மிதக்கும் விதைகளை நீக்கிவிட வேண்டும்.  இந்த உப்புக் கரைசலில் மூழ்கிய விதைகளை மட்டுமே எடுத்து பல முறை நல்ல தண்ணீரில் நன்கு கழுவிய பிறகே விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.
  விதை நேர்த்தி: விதை நேர்த்தியென்பது விதைகளை விதைக்கும் முன்பு ரசாயனக்கொல்லிகள் அல்லது எதிர் உயிர் பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியாக்களைக் கொண்டு உயிர் உரங்களுடன் மேல் பூச்சு செய்வதே ஆகும்.  உயிர் எதிர் பூசணக் கொல்லியான சூடோமோனஸ் புளுரோசன்ஸ்  பாக்டீரியாவை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் தண்ணீரில் கலந்து விதைகளை இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். அதை மறுநாள் காலையில் வடிகட்டி, விதைகளை ஈர சாக்கில் போட்டு உலர்த்தி பின்பு இருட்டு அறையில் வைத்திருந்து 3 முதல் 5 மில்லி மீட்டர் வரை முளை கட்டவேண்டும். விதைப்பதற்கு முன்பு முளைக் கட்டிய விதைகளை ஒரு ஏக்கருக்கு ஒரு பாக்கெட் (200 கிராம்) அசோஸ்பைரில்லம், ஒரு பாக்கெட் (200 கிராம்) பாஸ்போ பாக்டீரியம் உயிர் உரத்துடன் நன்கு கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.
  நாற்றின் வேர்களை நனைத்தல்: 1கிலோ சூடோமோனஸ் பாக்டீரியா கலவையை 10 சதுர மீட்டர் நாற்றங்காலில் உள்ள தண்ணீரில் கலந்து பின்னர் ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுகளின் வேர்களை குறைந்தது அரை மணி நேரம் ஊறவைத்து பின்பு நடவு செய்ய வேண்டும். நீண்ட நேரம் ஊறவைப்பதால் அதன் செயல்திறன் கூடுகிறது. 
  இவ்வாறு தரமான விதைகளை தேர்ந்தெடுத்து விதை நேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் நெல்பயிரைத்தாக்கும் குலை நோய், இலையுறைக் கருகல் மற்றும் இலைப்புள்ளி போன்ற நோய்களிலிருந்து நெற்பயிரை பாதுகாத்து அதிக விளைச்சல் பெறலாம்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai