சுடச்சுட

  

  "அடக்க நினைத்தால் மக்களின் போராட்டங்கள் தீவிரமடையும்'

  By DIN  |   Published on : 14th June 2018 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அடக்க நினைத்தால் மக்களின் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறினார்.
  திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற போராடுவோம் தமிழகமே எனும் பிரசார பயண வரவேற்பு நிகழ்ச்சியில் புதன்கிழமை பங்கேற்று அவர்  மேலும் பேசியது:
  போராடுவோம் தமிழகமே என்ற பெயரில் எதற்கு இந்த பிரசாரம் என பலரும் கேள்வி கேட்டனர். சமீப காலமாக சிலருக்கு போராட்டம் என்றாலே வேப்பங்காயாக கசக்கிறது.
  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க போராடினோம். நீட் தேர்வை ரத்து செய்யக் கூறி போராடினோம். பல இடங்களில் மக்கள் தன்னெழுச்சியாகவே தங்களின் வாழ்வாதாரங்களை பாதுகாத்துக் கொள்ள போராடுகிறார்கள். இவர்கள் எல்லாம் சமூக விரோதிகளா. இந்த போராட்டங்களிலெல்லாம் நடக்காத துப்பாக்கிச் சூடு, ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது மட்டும் ஏன் நடைபெற்றது. கார்ப்பரேட் கம்பெனிகளை எதிர்த்து போராடினால் துப்பாக்கியால் சுடுவோம் என அரசு மக்களை மிரட்டுகிறது.
  கடந்த 7 ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஜூன் 12 -ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டுள்ளது. அணைகளில் தண்ணீர் இல்லை என்று இதற்கு காரணம் கூறப்படுகிறது.  கர்நாடக அரசு நயவஞ்சகமாக தமிழகத்தை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது.  தமிழக அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தில் முறையிட்டு கோடைகாலத்தில் கர்நாடக அணைகளில் உள்ள தண்ணீரை மேட்டூர் அணைக்கு பங்கீட்டுக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
  காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி என எதுவுமில்லை. விவசாயத் தொழிலாளர்களுக்கு 100 நாள் வேலை இல்லை. ரேஷன் கடைகளில் அரிசியை தவிர வேறு எதுவுமில்லை. ஆந்திரத்தில் ரேஷன் கடைகள் அம்பானிக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. தமிழகத்திலும் அந்த நிலை வரலாம். காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக மாற்ற, மீத்தேன்,  ஷேல்கேஸ்,  ஹைட்ரோ கார்பன் என பல்வேறு பெயர்களில் மக்களை அச்சுறுத்தும் திட்டங்கள், கார்ப்பரேட் கம்பெனிகளின் வளர்ச்சிக்காக செய்யப்பட்டு வருகின்றன. அவர்களின் வளர்ச்சிக்கு கைகட்டி சேவகம் செய்கிறவைகளாக மத்திய, மாநில அரசுகள் உள்ளன. கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவான இவர்களின் கொள்கைகளுக்கு முடிவு கட்டவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த பிரசார பயணத்தை மாநிலம் முழுவதும் நடத்திக்கொண்டு வருகிறது என்றார் பாலகிருஷ்ணன்.
  முன்னதாக, திருவாரூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். பயணக் குழுவில் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ். வாலண்டினா மூசா, வி. மாரிமுத்து, ஐ.வி. நாகராஜன் கடலூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, பயணத்திட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
  இதையடுத்து  மாவூர் கடைவீதி, கச்சனம், ஆலத்தம்பாடி உள்ளிட்ட இடங்களில் பிரசாரம் நடைபெற்றது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai