சுடச்சுட

    

    அரசுப் பணியில் தனியார் துறை பணியாளர்களை நியமிக்கக் கூடாது: கே. பாலகிருஷ்ணன்

    By DIN  |   Published on : 14th June 2018 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசுப் பணிகளுக்குத் தனியார்துறையில் பணியாற்றும் அலுவலர்களை நியமிக்கக் கூடாது என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன். 
    மன்னார்குடியில் புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரசார இயக்க கூட்டத்தில், மக்களின் நலன் காக்க என்ற தலைப்பில் அவர் மேலும் பேசியது: இது தேர்தலுக்கான பிரசாரமும் இல்லை, மக்களிடம் வாக்கு கேட்கும் கூட்டமும் இது இல்லை. எதிர்கால இந்தியாவின் திசையை காட்டும் பிரசாரக் கூட்டம். கடந்த நான்கு ஆண்டு கால பாஜக ஆட்சியில் பெட்ரோலியப் பொருள்களின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக 40 ஆயிரம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.  காவிரியிலிருந்து தண்ணீர் திறந்து விடாததால் விவசாயம் அழிந்து வருகிறது. தற்போது வால்மார்ட் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது வர்த்தகத்தை இங்கு தொடங்கினால் வணிக நிறுவனங்கள் மூடப்படும் நிலை ஏற்படும். 
    அரசுத் துறைகளில் காலிப் பணியிடங்களை கணக்கெடுத்து அப்பணியிடங்களை ஒழித்துகட்ட, அரசுத் துறை நிறுவனங்கள், அலுவலகங்களில் தனியார் துறையிலிருந்து ஆள்களை நியமித்தால் அனைத்தும் தனியார் மையமாக மாறி அரசு நிர்வாகம் சீர்குலைந்து போகும். இதனால், லட்சக்கணக்கான இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிபோவதுடன், அவர்களின் எதிர்காலமும் கேள்விக் குறியாக மாறிவிடும் என்றார் பாலகிருஷ்ணன். 
    கட்சியின் நகரச் செயலர் எஸ். ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் மாவட்டச் செயலர் ஜி. சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர்கள் வீ. மாரிமுத்து, ஐ. வி. நாகராஜன், டி. வாலண்டினா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக, பிரசாரக் குழுவினரை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், மதிமுக, திராவிடர் கழகம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் சார்பில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணனுக்கு சால்வை அணிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai