Enable Javscript for better performance
திருநாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகை திருக்கல்யாணம்: ரிஷபாரூட திருக்காட்சி- Dinamani

சுடச்சுட

    

    திருநாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகை திருக்கல்யாணம்: ரிஷபாரூட திருக்காட்சி

    By DIN  |   Published on : 14th June 2018 02:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூரில் 12 சிவபெருமான்-அம்பிகை திருக்கல்யாணம் , 12 ரிஷபாரூட திருக் காட்சி வைபவம் புதன்கிழமை நடைபெற்றது. 
    நாகை மாவட்டம், சீர்காழி அருகேயுள்ள திருநாங்கூர் சைவ, வைணவ கோயில்கள் நிறைந்த ஆன்மிக தலமாகும். இவ்வூரை சுற்றி 11திவ்யதேச பெருமாள் கோயில்கள், 12 பிரசித்திப் பெற்ற சிவாலயங்கள் அமைந்துள்ளன. இவ்வாறு பிரசித்திப் பெற்ற திருநாங்கூரில் மதங்காஸ்ரமத்தில் மதங்கரிஷி தவம் செய்யும்போது, பார்வதிதேவி பெண்ணாக அவதரித்து பின்பு சிவ பெருமானை திருமணம் செய்துகொண்டு மதங்கரிஷிக்கு திருமணக்கோலத்தில் காட்சி  தரும் நிகழ்வு நடைபெற்றதாகவும், அதைத் தொடர்ந்து 12 சிவபெருமான்கள் அம்பாள்களுடன் ரிஷப வாகனங்களில் எழுந்தருளி திருக் கல்யாண கோலத்தில் வீதியுலா செல்லும் ஐதீக விழா  நடைபெற்றதாக கூறப்படுகிறது. . 
    130 ஆண்டுகளாக தடைபட்டிருந்த இவ்விழா கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் மீண்டும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நிகழாண்டு வைகாசி மாத ரோகிணி நட்சத்திரத்தையொட்டி 12 சிவபெருமான்-அம்பிகை  திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக, நாலாயிரம் பிள்ளையார் திருக்கோயில் விநாயகரும், அதைத் தொடர்ந்து திருநாங்கூர் பகுதியிலிருந்து அஞ்சனாக்ஷி சமேத மதங்கீஸ்வர சுவாமி, சந்திராக்ஷி சமேத அமிர்தபுரீஸ்வரர் சுவாமி, நம்பிற்பிரியாள் சமேத  நம்புவார்க்கன்பர் சுவாமி, காமாட்சி சமேத கைலாசநாதர் சுவாமி, திருக்காட்டுப்பள்ளி அகிலாண்டேஸ்வரி சமேத ஆரண்ய சுந்தரேஸ்வரர் சுவாமி, திருயோகீஸ்வரம் யோகாம்பிகா சமேத யோகநாத சுவாமி, காத்திருப்பு சொர்ணாம்பிகை சமேத சொர்ணபுரீஸ்வரர் சுவாமி, அல்லிவிளாகம்  நற்றுணைநாயகி சமேத நாகநாத சுவாமி, அன்னப்பன்பேட்டை சுந்தரநாயகி சமேத கலிக்காமேஸ்வர சுவாமி, பெருந்தோட்டம் அதிதுல்யகுஜாம்பிகை சமேத ஐரானவதேஸ்வர சுவாமி மற்றும் நயினிபுரம் நளினாம்பிகா சமேத நயனவரதேஸ்வர சுவாமி ஆகிய 12 சிவபெருமான்கள் தம் தேவியருடன் மேள, தாளங்கள் முழங்க திருநாங்கூர் ஸ்ரீமதங்கீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளினர்.
    தொடர்ந்து 12 சிவபெருமான்கள்-அம்பிகையுடன் மணமேடை மாடங்களில் வைக்கப்பட்டு வண்ண மலர்கள், ஆபரணங்கள் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர், பக்தர்கள் சீர்,வரிசைகள் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக மணமேடைக்கு வந்தனர். அப்போது, வேதவிற்பன்னர்கள் திருமந்திரங்கள் முழங்க ஹோமங்கள் நடைபெற்று திருக்கல்யாண சடங்குகள் நடந்தது. 12 சிவாச்சாரியார்கள் ஒரே நேரத்தில் மங்கலநாணை அம்பிகை கழுத்தில்கட்டி திருக் கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையடுத்து, 12 சிவபெருமான்-அம்பிகை, 12வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி மதங்கமகரிஷிக்கு திருக்காட்சி தரும் நிகழ்வு நடைபெற்றது. அடுத்து, 12 சிவபெருமான்கள்-அம்பிகையுடன் ரிஷபாரூட வாகனத்தில் வீதியுலா வாண வேடிக்கையுடன் நடைபெற்றது. இதில், நாகை மாவட்ட ஆட்சியர் சீ. சுரேஷ்குமார், வட்டாட்சியர் பாலமுருகன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai