சுடச்சுட

    

    கர்நாடகத்தில் பருவமழை தீவிரம்: மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு 25-இல் தண்ணீர் திறக்க வேண்டும்

    By DIN  |   Published on : 16th June 2018 12:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் அங்குள்ள அணைகள் நிரம்பி வரும் நிலையில், மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 25-ஆம் தேதி தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை  எடுக்க வேண்டும் என, தமிழக அனைத்து  விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
    திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது: 
    கர்நாடகம், கேரளத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் அங்குள்ள அணைகள் நிரம்பி வழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கபினி அணையிலிருந்து முதல் கட்டமாக 15 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
     இதேபோல், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும் நீர் திறக்க வாய்ப்புள்ளது. இதேநிலை தொடர்ந்தால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். எனவே, குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 25-ஆம் தேதி  தண்ணீர் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    அவ்வாறு மேட்டூர் அணை திறக்கப்பட்டால் கடைமடைக்கு தண்ணீர் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் உள்ளனர். காரணம், எந்த ஆறுகளும் தூர்வாரப்பட வில்லை. 
    கடந்த ஆண்டு நீர்வள நிலவளத் திட்டத்தின் கீழ் ஏரிகள் மேம்படுத்தும் பணிக்கு டெண்டர் விடப்பட்டும், பணிகள் தொடங்கப்படவில்லை. 
    குடிமராமத்துப் பணி திட்டத்தின் கீழ் தற்போதுதான் டெண்டர் விடும் பணி தொடங்கியுள்ளது. தூர்வாரும் பணி தொடங்கப்படவில்லை. 
    இதனால், இதற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் ஊழல் நடைபெற வழி வகுக்குமே தவிர, பணிகள் நடைபெறப் போவதில்லை. இதுகுறித்து பொதுப்பணித் துறை பொறுப்பு வகிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும் .
    மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகளைக் கொண்ட குழுக்கள் அமைத்து, முறைகேடுகளின்றி பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும். கோரையாறு மற்றும் விளை நிலப் பகுதிகளில் மணல் கொள்ளை இரவு பகலாக நடந்து வருவதால் மழை காலங்களில் பேரிடர் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மணல் கொள்ளையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .
    இந்த பேட்டியின்போது, சங்க மாவட்ட கௌரவத் தலைவர் செல்வராஜ், துணைச் செயலாளர் அக்கிரி அருள், கோட்டூர் ஒன்றியச் செயலாளர் தெய்வமணி, திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai