சுடச்சுட

  

  அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் கொரடாச்சேரி பேரூராட்சி: வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படுமா?

  By கே. கோதண்டராமன்  |   Published on : 17th June 2018 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டத்தில், அடிப்படை வசதிகளின்றி உள்ள கொரடாச்சேரி பேரூராட்சி வளர்ச்சிபெறுமா? என அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்கள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
  திருவாரூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 7 பேரூராட்சிகளில் முக்கியப் பேரூராட்சி கொரடாச்சேரி. இந்த பேரூராட்சி, திமுக தலைவர் மு. கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள திருவாரூர் தொகுதிக்குள்பட்டதாகும். இதனால், இந்த பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டை அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
  இந்த பேரூராட்சியில், பேருந்து நிறுத்தம் இருந்தும் திருச்சி, தஞ்சை, நாகையிலிருந்து வரும் பேருந்துகள் இங்கு வராமல் தேசிய நெடுஞ்சாலை வழியாக நேராக சென்றுவிடுகின்றன. இதனால், கொரடாச்சேரி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 கி.மீட்டர் தொலைவு நடந்து வரும் நிலை உள்ளது.
  அதேபோல், இந்த பேரூராட்சியில் ஏற்கெனவே இருந்த அரசு மருந்தகம் காலி செய்யப்பட்டு, அந்த மருந்தகம் இருந்த இடம் புதர்கள் மண்டி பாழடைந்து கிடக்கிறது. பேரூராட்சியாக இருந்தபோதும், இங்கு ஓர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கூட இல்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
  இதுகுறித்து, கொரடாச்சேரி வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எம்.பி. துரைவேலன் கூறியது:
  கொரடாச்சேரி பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் போன்ற அவசியமான அமைப்புகள் இல்லை. தீ விபத்து நேரிட்டால், குடவாசல் அல்லது கூத்தாநல்லூரிலிருந்து ஒரு மணி நேரம் கழித்துதான் தீயணைப்பு வாகனம் வரும் நிலை உள்ளது. ஆம்புலன்ஸ் வாகன வசதியும் இல்லை. அவசரத் தேவைக்கு திருவாரூரிலிருந்துதான் ஆம்புலன்ஸ் வரவேண்டும். இங்குள்ள ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் செயல்படவில்லை. இப்பகுதியில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். அதற்கேற்றார்போல், அடிப்படை வசதிகள் எதுவும் செய்துதரப்படவில்லை என்றார்.
  கொரடாச்சேரியில் வட்டார வளர்ச்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம், அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளிகள் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள், ரயில் நிலையம் என பல்வேறு அரசு அலுவலகங்கள் இருந்தபோதும், இந்த பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் ஏதுமின்றி அப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.
  எனவே, கொரடாச்சேரி பேரூராட்சியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம் போன்றவை ஏற்படுத்தவும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai