சுடச்சுட

  

  தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் சாதனையாளராக உயர்த்தும்

  By DIN  |   Published on : 17th June 2018 01:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒவ்வொருவரும் தன்னம்பிக்கையையும், விடாமுயற்சியையும் வளர்த்துக் கொண்டால், சாதனையாளர்களாக உயரலாம் என்றார், தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளரும், தேர்வு நெறியாளருமான எம். ரவீந்திரநாத் தாகூர்.
  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த மேவாசல் குமரபுரத்தில் உள்ள சதாசிவம் கதிர்காமவள்ளி மகளிர் கல்லூரி மற்றும் அருணாமலை கல்வியியல் கல்லூரி ஆகியவற்றின் 8-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்வியியல் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
  விழாவுக்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் ஜி. சதாசிவம் தலைமை வகித்தார். தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளரும், தேர்வு நெறியாளருமான எம். ரவீந்திரநாத் தாகூர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு பேசியது :
  பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சிறுவனுக்கு 5-ஆம் வயதிலேயே உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், கற்றலில் குறைபாடு உள்ள மாணவராக கண்டறியப்பட்டார். இதனால், 7-ஆம் வகுப்போடு படிப்பை பாதியில் முடித்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். பின்னர், தனிப்பயிற்சி மூலம் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற அவருக்கு எந்த கல்லூரியிலும் இடம் கிடைக்கவில்லை.
  இந்நிலையில், சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கல்லூரியில், இளங்கலை ஆங்கிலம் எடுத்து பயின்றார். படிப்புச் செலவுக்காக பள்ளி, கல்லூரி காலங்களில் கூலிவேலைக்குச் சென்றார். பின்னர் நான் பேராசிரியராக பணியாற்றிய மாநிலக் கல்லூரியில் முதுகலை ஆங்கிலப்பிரிவு சேர்ந்தபோது தான், அந்த மாணவரைப் பற்றி அறிந்தேன். அது முதல் அந்த மாணவரின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வந்தோம்.
  இதன் விளைவாக பல்வேறு போட்டித் தேர்வுகளை எழுதினார். குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்று பத்திரப்பதிவுத் துறையில் பணியில் சேர்ந்தார். இதில் மனநிறைவு ஏற்படாததால், ஐஏஎஸ் தேர்வு எழுதி, அதில் 7-ஆவது முயற்சியில் வெற்றி பெற்றார். ஆனாலும், பணியில் சேராமல் மேலும் ஐஆர்எஸ் தேர்வு எழுதி, அதிலும் வெற்றி பெற்றார். இன்று திருச்சியில் வணிகவரித்துறையில் தலைமை அதிகாரியாக உயர்ந்த பதவியில் இருக்கும் நந்தகுமார் தான் அவர். தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் தான் அவரை வாழ்க்கையில் உயர்த்தி, லட்சியத்தை அடைய வைத்தது என்றார் அவர்.
  விழாவில், 178 கல்லூரி மாணவியருக்கும், 38 கல்வியியில் கல்லூரி மாணவியருக்கும் பட்டம் அளிக்கப்பட்டது. இதில், கல்லூரி தாளாளர் எஸ். சரவணக்குமார் சௌத்ரி, மகளிர் கல்லூரி முதல்வர் ச. சர்மிளா தாகூர், கல்வியியல் கல்லூரி முதல்வர் வி. உமா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai