Enable Javscript for better performance
பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: 2 பேருக்கு அரிவாள் வெட்டு- Dinamani

சுடச்சுட

    

    பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை: 2 பேருக்கு அரிவாள் வெட்டு

    By DIN  |   Published on : 17th June 2018 01:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. 3 பேர் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டனர்.
    கண்ணாரப்பேட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் த. வெங்கடேசன் (49). இவர் தனது நண்பர் மேலநத்தம் சோ. அசோக்குமாரிடம் (45) கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு ரூ.1 லட்சம் கைமாற்றாக வாங்கினாராம். இந்நிலையில், குறித்த காலத்தில் பணத்தைத் திரும்ப கொடுக்கத் தவறியதால், கால அவகாசம் கோரிய வெங்கடேசன், வட்டியுடன் பணத்தைத் திருப்பி தருவதாகக் கூறினாராம். இதற்கு அசோக்குமார் ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது.
    இந்நிலையில், தன்னிடம் வாங்கிய ஒரு லட்சம் ரூபாயை திருப்பித் தருமாறு வெங்கடேசனை அசோக் குமார் வலியுறுத்தினார். இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், அசோக்குமார் வெள்ளிக்கிழமை வெங்கடேசன் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்தினரிடம் பணத்தை உடனடியாக திருப்பித்தர வேண்டும் என கூறியிருக்கிறார். இதையறிந்த வெங்கடேசன், அசோக்குமாரை செல்லிடப்பேசியில் தொடர்புகொண்டு, தனது வீட்டுக்கு வந்ததைக் கண்டித்தாராம்.
    இந்நிலையில், சனிக்கிழமை அசோக்குமார் தனது நண்பர்களுடன் இருசக்கர வாகனங்களில், மன்னார்குடி- திருமக்கோட்டை சாலையில் உள்ள கீழநத்தம் கடைத்தெருவில் சென்றபோது அவர்களை வெங்கடேசன், அவரது சகோதரர் கனகசபை (44) உள்ளிட்டோர் வழிமறித்தனர். அப்போது, இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில், ஒருவரையொருவர் அரிவாள், உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர்.
    இதில், வெங்கடேசன், கனகசபை ஆகியோர் மீது அரிவாள் வெட்டு விழுந்தது. அசோக்குமார், பா. தினேஷ்(28), அ. ஆனந்தராஜ்(24) ஆகியோர் உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டதில் காயமடைந்தனர். இதையடுத்து, வெங்கடேசன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், கனகசபை மன்னார்குடி அரசு மருத்துவமனையிலும், அசோக்குமார், தினேஷ், ஆனந்தராஜ் ஆகிய மூவரும் மன்னார்குடி தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
    இதுகுறித்து இருதரப்பினரும் தனித்தனியே பரவாக்கோட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai