சுடச்சுட

  

  பெட்ரோலியப் பொருள்களின் விலை உயர்வை திரும்பப் பெறக்கோரி 20- இல் ஆர்ப்பாட்டம்: இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

  By DIN  |   Published on : 17th June 2018 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி, திருவாரூரில் புதன்கிழமை (ஜூன் 20) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான வை.சிவபுண்ணியம் தெரிவித்துள்ளார்.
  இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
  எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதத்துக்கு இருமுறை மாற்றியமைத்துக் கொள்ளலாம் என காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் விருப்பத்திற்கேற்ப விலையை நிர்ணயம் செய்து வந்தன.
  இந்நிலையில் இந்த நடைமுறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிடப்பட்டு, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துக்கொள்ளலாம் என தற்போதைய மத்திய அரசு அறிவித்தது. இதனால், எரிபொருள்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ச்சியாகவும், படிப்படியாகவும் உயர்த்திக் கொண்டே வருகின்றன. குறிப்பாக, கர்நாடக சட்டப் பேரவை தேர்தலுக்குப் பின்னர் பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இது குறித்து மத்திய அரசும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
  லிட்டருக்கு பெட்ரோல் விலை ரூ.81.28-க்கும், டீசல் விலை ரூ.73.06-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மானியத்துடன் கூடிய வீட்டு பயன்பாட்டு எரிவாயு உருளை விலை ரூ 2.12 காசும், மானியம் அல்லாத உருளையின் விலை ரூ. 49.50 காசும் உயர்த்தியுள்ளது. இந்த விலையேற்றத்தால் ஏழை, எளிய, நடுத்தர மக்களும், வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவதுடன் சிலிண்டர் விலை ஏற்றத்தால் இல்லத்தரசிகளும் மிகக் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இந்த விலை ஏற்றத்தால் அனைத்து அத்தியவாசிய பொருள்களின் விலையும் மிக கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய மாநில அரசுகள் மக்களின் நலன் கருதி உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல், டீசல், சமயல் எரிவாயு விலையை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்.
  இக்கோரிக்கையை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும், திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் கட்சியின் மாநில, மாவட்டத் தலைவர்கள் தலைமையில் புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai