வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
By DIN | Published on : 17th June 2018 01:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து, நகைகளை திருடிச் சென்றிருப்பது சனிக்கிழமை தெரியவந்தது.
திருவாருர் அருகேயுள்ள பெருந்தரக்குடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் திலகவதி (50). இவரது, கணவர் மாரிமுத்து வெளிநாட்டில் வசித்து வருகிறார். சில நாள்களுக்கு முன்பு வெளியூரில் இருக்கும் தனது மகளை பார்க்க திலகவதி சென்றுள்ளார். இந்நிலையில், அவரது வீட்டின் முன்பக்க கதவில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட பக்கத்து வீட்டுக்காரர் செல்வமுருகேசன், திலகவதியிடம் தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, கொரடாச்சேரி போலீஸாரிடம் திலகவதி புகார் அளித்தார். அதன்பேரில், நிகழ்விடத்துக்குச் சென்று போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் 2 கிலோ வெள்ளிப் பொருள்கள், 3 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர், இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.