சுடச்சுட

  

  தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்: தொடர் திருட்டு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம்

  By DIN  |   Published on : 19th June 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் அடுத்தடுத்த நாள்களில் நிகழ்ந்த தொடர் திருட்டு சம்பவங்களால் அச்சமடைந்துள்ள கிராம மக்கள், காவல் துறையினர் விரைந்து செயல்பட்டு கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 
  கொரடாச்சேரி காவல் நிலையத்துக்குள்பட்ட திருக்கண்ணமங்கையில், ஜோன்மரியம் என்பவரது வீட்டில், கடந்த மே 29- ஆம் தேதி ரூ. 6 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டன. 
  இதேபோல், ஜூன் 12- ஆம் தேதி கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி கிராமத்தில் சேகர் என்பவரது வீட்டில் நகை, பணம் மற்றும் வீட்டு வாசலில் நிறுத்தப்பட்டிருந்த கார் மர்ம நபர்களால் திருடப்பட்டது.  
  இந்நிலையில், பெருந்தரக்குடியைச் சேர்ந்த திலகவதி  வீட்டில் ஜூன் 15- ஆம் தேதி பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள்  3 பவுன் நகை, 3 கிலோ வெள்ளிப் பொருள்களை திருடிச் சென்றனர். 
  அடுத்த நாள் ஜூன்16- ஆம் தேதி அதே பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவரது வீட்டில்  முன்பக்க வாசல் கதவின் பூட்டை உடைத்து இருசக்கர வாகனத்தை  திருடிச் சென்ற மர்ம நபர்கள், அந்த வாகனத்தில் பெட்ரோல் இல்லாததால் அருகில் உள்ள வாய்க்கால் பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.
  அடுத்தடுத்து நடைபெற்ற இந்த திருட்டுச் சம்பவங்களால் பெருந்தரக்குடி மற்றும் அருகில் உள்ள தேவர்கண்டநல்லூர், குளிக்கரை, ஒட்டக்குடி, கடம்பங்குடி, புலியூர், மேப்பலம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
  இதுகுறித்து, பெருந்தரக்குடி முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் மதிவாணன் கூறும்போது, எங்கள் பகுதியில் தொடர் திருட்டு நடைபெறுவதால், இப்பகுதிகளில் இரவு நேர காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
  இதுகுறித்து, கொரடாச்சேரி காவல் ஆய்வாளர் ஆனந்தி கூறியது:
  கொள்ளையர்களைப் பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளோம். திருட்டு சம்பவங்கள் நடந்த இடங்களில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் மூலம் பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம்.  விரைவில், குற்றவாளிகளைப் பிடித்துவிடுவோம் என்றார்.
  காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும் என்பதே பெருந்தரக்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai