சுடச்சுட

  

  நெல் கொள்முதலில் குறைபாடு: வெளி மாநிலங்களில் அரிசி வாங்கும் நிலை: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

  By DIN  |   Published on : 19th June 2018 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நெல் கொள்முதலில் உரிய ஏற்பாடு செய்யாததால்தான் வெளி மாநிலங்களில் அரிசி வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
  இதுதொடர்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநிலத் துணைச் செயலாளர் பி.எஸ். மாசிலாமணி வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, நெல் கொள்முதலில் உரிய  திட்டமிடாததால் அரசுக்கும்,  விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்படும் நிலை வந்துள்ளது. மத்திய தொகுப்பு மூலம் வழங்கப்படும் அரிசிக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டின் பல மாவட்டங்களுக்கான அரிசி பயன்பாட்டுக்கும் காவிரி டெல்டா மாவட்டங்களில் விளையும் நெல் தான் அடிப்படையாகும். கடந்த சில ஆண்டுகளாக வறட்சி, மழையின்மை,  விவசாயிகளின் ஆர்வமின்மை ஆகிய காரணங்களால் விளைச்சல் சரிந்துள்ளது. டெல்டா மாவட்டங்களில் பருவ காலங்களில் சுமார் 18 முதல் 20 லட்சம் டன் நெல்கொள்முதல் தமிழக அரசு மூலம் செய்யப்படும்.  
  ஆனால், நிகழாண்டு பருவத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 3.86,  நாகப்பட்டினம் மாவட்டத்தில் 1.71,  தஞ்சாவூர் மாவட்டத்தில் 2.22 லட்சம் டன் என  மொத்தம் 7.79 லட்சம் டன் தான் கொள்முதல் ஆகியுள்ளன. அதுவும், வேறு மாவட்டங்களில் இருந்து  வந்த நெல்லானது, பெருமளவில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதால் இந்த அளவு கிடைத்துள்ளது. இந்த நிலையில் பொது விநியோகத் திட்ட வழங்கலுக்கான அரிசி எதிர்வரும் மாதங்களுக்குப் போதுமான அளவு இருப்பு இல்லாததால் வெளி மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்ய  அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு கிலோ அரிசி ரூ.28 வீதம் கொள்முதல் செய்ய  அரசு ஏற்பாடு செய்து வருகிறது. 
   டெல்டா மாவட்டங்களில் நவம்பர் மாதமே ஈரப்பதத்தை உயர்த்தி கொள்முதல் செய்யவும், அறுவடை நிலை அறிந்து உரிய காலத்தில் கொள்முதல் நிலையங்களை திறக்கவும், ரொக்கமாகவோ, வங்கி மூலமோ விவசாயிகள் விரும்பும் முறையில் பணத்தை வழங்க  நடவடிக்கை எடுத்திருந்தால் அரசு கொள்முதல் அளவு உயர்ந்திருக்கும். 
   இந்த இடர்பாடுகளால் விவசாயிகள் மூன்றில் ஒரு பங்கு நெல்லை தனியாரிடம் விற்றனர். பல இடங்களில் அரசு கொள்முதல் நிலையங்களை விட கூடுதலான மூட்டைகள் வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். இவர்கள், முற்பகுதி கொள்முதல் செய்ததை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பினர்.  பிற்பகுதியில்  அனைத்தையும் அரசு நிலையங்களில் விற்பனை செய்தனர். கொள்முதல் நிலையம் செயல்பாட்டில் உள்ள கிராமங்களில் கூட விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம்  நெல்லை விற்றது ஏன் என்பதை அறிந்து இடர்பாடுகளை களைந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்திருந்தால் அரிசி பற்றாக்குறை ஏற்பட்டிருக்காது. எனவே, எதிர்காலங்களில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai