சுடச்சுட

  

  தீண்டாமை, வன்கொடுமைகளை தடுக்க உரிய நடவடிக்கை: ஆட்சியர் இல. நிர்மல்ராஜ்

  By DIN  |   Published on : 20th June 2018 05:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்கு எதிராக நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் இல. நிர்மல்ராஜ். 
  திருவாரூர் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற, ஆதிதிராவிடர், பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு எதிராக நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. இதற்காக 1955-ஆம் ஆண்டு குடியியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் மற்றும் 1989-ஆம் ஆண்டின் எஸ்சி மற்றும் எஸ்டி வன்கொடுமைத் தடுப்பு சட்டம் மற்றும் விதிகள் போன்றவை மத்திய அரசால் உருவாக்கப்பட்டு, மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அரசின் ஒப்புதலோடு திருத்தங்கள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு அவை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு திருத்தச் சட்டம் 2015 மற்றும் திருத்தப்பட்ட விதிகள் 2016 என மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டு முறையே அமலுக்கு வந்துள்ளன.
  மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் (சென்னையைத் தவிர) தீண்டாமை விட்டொழித்து பொதுமக்கள் நல்லிணக்கத்துடன் வாழும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமத்திற்கு ரூ.10 லட்சம் தமிழக அரசால் நிதி வழங்கப்படுகிறது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015-இன்படி கலவரங்களால் பாதிக்கப்பட்ட எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு தீருதவியாக உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு அதிகபட்சமாக ரூ. 8.25 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி மற்றும் ஒரு வீடு, விவசாய நிலம் வழங்கப்படுகிறது. விதவை மற்றும் சார்ந்தோருக்கு அரசு ஊழியர்களுக்கு தரப்படும் அகவிலைப்படியுடன் கூடிய அடிப்படை ஓய்வூதியம் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்  நலன்காக்கும் வகையில் ஏழ்மை நிலையிலுள்ள வீடற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு இலவச மனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன. பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன என்றார் நிர்மல்ராஜ்.
  கூட்டத்தில் வன்கொடுமை தொடர்பாக விசாரணையில் உள்ள வழக்குகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிப்புக் குழு மூலம் ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் கே. கோபால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் க. சக்திமணி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜான்ஜோசப், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கிருஷ்ணன், வன்கொடுமை தடுப்பு கண்காணிப்புக்குழு உறுப்பினர்கள், குற்றவியல் வழக்குரைஞர் உள்ளிட்டோர்
  பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai