பயிர்க் காப்பீடு கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்
By DIN | Published on : 20th June 2018 05:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த கோட்டூரில் பயிர்க் காப்பீடு கோரி விவசாயிகள் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர், குன்னியூர், ரெங்கநாதபுரம், செருகளத்தூர் ஆகிய நான்கு ஊராட்சிப் பகுதிகளில் கடந்த 2016-17 ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு, பயிர் சேதத்துக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக, வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு மனு அளித்தும், பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து, கோட்டூரில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாநில விவசாய அணி செயலரும் முன்னாள் எம்பியுமான ஏ.கே.எஸ். விஜயன், முன்னாள் எம்எல்ஏவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலருமான வை. சிவபுண்ணியம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
திமுக தெற்கு ஒன்றியச் செயலர் வி.எஸ்.ஆர். தேவதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் கே. மாரிமுத்து, விவசாய சங்க ஒன்றியச் செயலர் பரந்தாமன், பொது விவசாயிகள் சங்க நிர்வாகி கணபதி சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர்.
போராட்டம் குறித்து தகவலறிந்த மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் சந்துரு, துணை இயக்குநர் சிவக்குமார், கோட்டூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முரளி ஆகியோர் நிகழ்விடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பயிர்க் காப்பீட்டுத் தொகை பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்த போராட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது.