பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்
By DIN | Published on : 21st June 2018 10:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வுக்கு காரணமாக உள்ள பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும், பெட்ரோல், டீசல் விலையை கட்டுக்குள் வைக்க அவற்றை ஜிஎஸ்டி க்குள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூர் மாவட்டச் செயலர் வை.சிவபுண்ணியம் தலைமை வகித்தார். கட்சியின் மாநில துணைச் செயலர் கே. சுப்பராயன், தேசியக் குழு உறுப்பினர் கோ.பழனிச்சாமி, மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் எம்.செல்வராசு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இதில், கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் எம். வையாபுரி, சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே. உலகநாதன், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் ஞானமோகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.