சுடச்சுட

  

  மீன்மார்க்கெட்டை அகற்றக் கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜகவினர் கைது

  By DIN  |   Published on : 21st June 2018 10:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  முத்துப்பேட்டை ஆசாத் நகரில் உள்ள மீன் மார்க்கெட்டை அகற்றக் கோரி உண்ணாவிரதம் இருக்க முயன்ற பாஜகவினரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். 
  முத்துப்பேட்டை ஆசாத் நகரில் போக்குவரத்து இடையூறாக உள்ள மீன் மார்க்கெட்டை அகற்ற வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த பாஜக அறிவித்திருந்தது. இதற்கு எதிராக சில அமைப்புகளும் போராட்டத்தை அறிவித்தது. இதில் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால், இருதரப்பினருக்கும் போராட்டம் நடத்த போலீஸார் அனுமதியளிக்கவில்லை. 
  இதையடுத்து, பாஜக மீன்மார்க்கெட்டை அகற்றக் கோரி புதன்கிழமை முதல் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், இதில், பாஜக தேசியச் செயலர் எச். ராஜா, மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம், மாவட்டத் தலைவர் சிவா உள்ளிட்டோர் பங்கேற்க செய்வதென அறிவிக்கப்பட்டிருந்தது. அசம்பாவித நிகழ்வு ஏதும் நடைபெறாத வகையில், காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினர் இரு தரப்பினரிடமும் தனித்தனியாக நடத்திய சுமுகப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. 
  இருப்பினும், திட்டமிட்டப்படி உண்ணாவிரதம் நடைபெறும் என்று பாஜக தெரிவித்ததால், தஞ்சை சரக டிஐஜி லோகநாதன், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எம். மயில்வாகனன் மற்றும் காவல் துறை அலுவலர்கள் முத்துப்பேட்டையில் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதற்கிடையில், ஜாம்புவானோடையில் வீட்டில் இருந்த பாஜக மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தத்தையும், பேட்டை கிராமத்தில் வீட்டில் இருந்த பாஜக மாவட்டத் தலைவர் சிவா ஆகியோரை கைது செய்தனர். 
  அடுத்து, உண்ணாவிரதம் அறிவிக்கப்பட்டிருந்த பேரூராட்சி அலுவலகம் பகுதியில் கூடிய பாஜக ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், கோட்ட இளைஞர் அணித் தலைவர் ராமலிங்கம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறை வைத்தனர். மண்டபத்தில் பாஜக மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் மற்றும் 6 பெண்கள் உள்ளிட்ட 126 பேர் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். காவல் துறை சார்பில் உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தும் அதை பாஜகவினர் ஏற்கவில்லை. மீன் மார்க்கெட் அகற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, பாஜகவினர் உள்ள மண்டபம் பகுதியில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், காலையில் கைதான பாஜகவினர் அனைவரையும் மாலை போலீஸார் விடுவித்தனர்.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai