Enable Javscript for better performance
விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த மத்திய அரசு: மகாராஷ்டிர விவசாயிகள் தலைவர் விஜூ கிருஷ்ணன்- Dinamani

சுடச்சுட

  

  விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த மத்திய அரசு: மகாராஷ்டிர விவசாயிகள் தலைவர் விஜூ கிருஷ்ணன்

  By DIN  |   Published on : 21st June 2018 10:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபோதிலும், அவற்றை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் மத்திய பாஜக அரசு 4 ஆண்டுகளாக துரோகம் இழைத்துவிட்டது என்றார் மகாராஷ்டிர மாநில விவசாயிகள் போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளரும், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளருமான விஜூ கிருஷ்ணன்.
  காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட 56-ஆவது மாநாடு வரவேற்புக் குழுவின் சார்பில், விவசாயிகளுக்கான சிறப்பு கருத்தரங்கம், மன்னார்குடி காந்திஜி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
  இதில், அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் இணைச் செயலாளர் விஜூ கிருஷ்ணன் கலந்துகொண்டு, "விவசாயமும், போராட்டமும்' என்ற தலைப்பில் பேசியது :
  விவசாயம் சார்ந்த பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்று தேர்தல் அறிக்கையில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. எனினும், அவற்றை நிறைவேற்றாமல், விவசாயிகளுக்கும், விவசாயத் தொழிலாளர்களுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசு துரோகம் இழைத்துவிட்டது. கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டு வரை 36 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்திருப்பதாகவும், மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டும் 5 வயதுக்கு உள்பட்ட ஏராளமான குழந்தைகள் பட்டினியால் இறந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
  விவசாய நிலங்களை கையகப்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட விவசாயிகளிடம் அனுமதி கேட்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனாலும், இதை மதிக்காமல் அடக்குமுறையின் மூலம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாய நிலங்கள் தாரைவார்க்கப்படுகின்றன.
  இதற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கம், மேலும் 300 விவசாயச் சங்கங்களைத் திரட்டி, மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து மும்பை நோக்கி நடைப்பயணம் மேற்கொண்டது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் தன்னெழுச்சியாக இதில் பங்கேற்றனர். நடைப்பயணம் மும்பையை அடைந்ததும், விவசாயிகளின் போராட்டத்துக்கு அரசுப் பணிந்து, கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அறிவித்தது என்றார் விஜூ கிருஷ்ணன்.
  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலர் பெ. சண்முகம் பேசுகையில், சீனப் புரட்சிக்குப் பிறகு மிகப்பெரிய புரட்சியை மகாராஷ்டிர விவசாயிகள் நடத்தி முடித்துள்ளனர். ஆனால், தமிழ்நாட்டில் விவசாயிகளின் போராட்டங்கள் அடக்குமுறையின் மூலம் தடுத்து நிறுத்தப்படுகின்றன. விவசாயி என்ற உரிமை அவரிடம் விளைநிலங்கள் இருக்கும் வரை தான். அதை அரசாங்கம் பறித்துக் கொண்ட பின்னர், அவர் எந்த வகையில் விவசாயியாக இருக்க முடியும்? வளர்ச்சி என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்திக் கொண்டு லட்சக்கணக்கான விவசாய நிலங்களை பசுமை சாலை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களுக்காக விவசாயிகளிடமிருந்து பறித்துக்கொள்ளும் வேலையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தி வருகின்றன என்றார்.
  இயற்கை வேளாண்மை மற்றும் சூழலியாளர் பாமயன் பேசும்போது, கடந்த 1991-ஆம் ஆண்டு தனியார்மயம், தாராளமயம் ஆகியவை தொடங்கியதில் இருந்தே விவசாயிகளுக்கு சிக்கல் ஆரம்பமாகிவிட்டது. விவசாயிகளின் தற்சார்பு திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருகிறது. விவசாயம் தான் நாட்டின் இறையாண்மை. அதைக் கொள்ளையடிப்பது, நாட்டையே கொள்ளையடிப்பதற்கு சமம் என்றார்.
  இந்த கருத்தரங்குக்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க  தஞ்சை கோட்டத் தலைவர் இரா. புண்ணியமூர்த்தி தலைமை வகித்தார்.  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வி. சுப்பிரமணியன், மாநிலச் செயலர் சாமி. நடராஜன், காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கப் பொதுச் செயலர் காவிரி எஸ். ரெங்கநாதன், அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில் செ. அண்ணாதுரை, காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தஞ்சை கோட்ட இணைச் செயலர் வ. சேதுராமன், இந்தியாவுக்கான மக்கள் இயக்கத் தலைவர் ரா. இயேசுதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai