சுடச்சுட

    

    தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிக்கு ஒதுக்கும் நிதியை நிராகரித்தால் போராட்டம்: எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா

    By DIN  |   Published on : 22nd June 2018 07:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மன்னார்குடி சட்டப் பேரவைத் தொகுதி வளர்ச்சித் திட்டப் பணிக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை நிராகரித்தால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்றார் தொகுதி எம்எல்ஏ. டி.ஆர்.பி. ராஜா. 
    மன்னார்குடியில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: கடந்த 2016-2018-ஆம் ஆண்டில் மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட மன்னார்குடி ஒன்றியத்தில் 31 ஊராட்சிக்கு ரூ. 1.68 கோடி, நீடாமங்கலம் வடக்கு ஒன்றியத்தில் 24 ஊராட்சிகளுக்கு ரூ. 1.28 கோடி, நீடாமங்கலம் தெற்கு பகுதியில் 20 ஊராட்சிகளுக்கு ரூ. 1.18 கோடி, நீடாமங்கலம் பேரூராட்சியில் 14 வார்டுகளஉக்கு ரூ. 21 லட்சம், மன்னார்குடி நகராட்சியில் 33 வார்டுகளுக்கு ரூ. 68 லட்சம், கோட்டூர் ஒன்றியத்தில் 9 ஊராட்சிக்கு ரூ. 45 லட்சம் என மொத்தம் 5.48 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
    இதில், குடிநீர், கட்டடம், சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளும் அடங்கும். மிக நீண்ட காலமாக மேம்பாடு செய்யாமல் இருந்த மன்னார்குடி, மேலவாசல் சாலை, உள்ளிக்கோட்டை பேட்டை சாலை, மன்னார்குடி, ஒரத்தநாடு தொகுதியை இணைக்கும் தென்பாதி - சமயன்குடிக்காடு சாலை ஆகிய நெடுஞ்சாலைத் துறை சாலைகளும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
    கும்பகோணம், மன்னார்குடி, அதிராம்பட்டினம் நெடுஞ்சாலை மேம்படுத்தும் பணி நடைபெற்று வரும் நிலையில், சாலையிலிருந்து அகற்றப்பட்ட  தார் மற்றும் கலவைகளை அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தாமல், சாலை ஓரங்களில் கொட்டிவைத்து விட்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் புதிதாக அமைக்கப்படும் சாலை சேதமடைவதுடன், சாலையோரங்களில் உள்ள மரங்களுக்கு பாதிப்பு உண்டாகும். மிகமோசமாக சாலை அமைக்கும் பணியை செய்து வருகின்றனர். மேலும், சாலை மேம்பாட்டுக்கான பணியால், குடியிருப்பு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணத்தை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    காவிரி நதிநீர் பிரச்னையில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு துரோகம் இழைத்தது போன்றே, இப்போது எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் முடிவிலும் காவிரி டெல்டா மாவட்டத்துக்கு எடப்பாடி அரசு துரோகம் செய்துள்ளது. 
    மதுரை மாவட்டம், தோப்பூரை விட தஞ்சை அடுத்த செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான இடம், சாலை, போக்குவரத்து என அனைத்து வசதிகளும் நிறைந்து காணப்படுகிறது. இம்மருத்துவமனை அமைவதற்கான இடத்தை தேர்வு செய்ததில் முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். 
    காவிரி டெல்டா மாவட்டத்தில் விவசாய விளைப் பொருள்களின் மதிப்பைக் கூட்டும் வகையில் தொழிற்சாலை கொண்டு வர வேண்டம் என தொடர்ந்து சட்டப் பேரவையில் பேசி வலியுறுத்தி வருகிறேன். 
    வடுவூர் ஏரியில் குவிந்து கிடக்கும் பொறுக்கு மண்ணை விவசாயப் பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ள அப்பகுதி விவசாயிகளுக்கு அனுமதியளிக்க வேண்டும். வடுவூர் ஏரியை தூர் வார நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
    கடந்த ஏழு ஆண்டுகளாக நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும், சுரங்கப்பாதை பணிக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். நிலம் கையகப்படுத்துவதில் தமிழகஅரசு ஒத்துழைக்கவில்லை என மத்திய ரயில்வேத்துறை அமைச்சகம் தெவித்துள்ளது. மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில், திட்டப் பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்தால், அரசியல் நிர்பந்தம் காரணங்களால் நிதியை சம்பந்தப்பட்ட அரசுத் துறை அலுவலர்கள் ஒத்துழைப்பு அளிக்காமல் நிதியினை நிராகரிக்கின்றனர். மன்னார்குடி நகராட்சி, நீடாமங்கலம் பேரூராட்சியில் தற்போது கூட தலா ரூ. 25 லட்சம் என மொத்தம் ரூ.50 லட்சம் நிதி நிராகரிக்கப்பட்டுள்ளது. 
    தொகுதி மக்களுக்களின் கோரிக்கையை ஏற்று, திட்டப் பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகுதி மேம்பாட்டு நிதியை தொடர்ந்து அரசுத்துறை அலுவலர்கள் நிராகரித்தால் பொதுமக்களை ஒன்று திரட்டி, சம்பந்தப்பட்ட அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார் ராஜா.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai