"ரத்த பரிமாற்று முறையை பயிற்சி மருத்துவர்கள் அறிந்து கொள்வது அவசியம்'
By DIN | Published on : 22nd June 2018 07:06 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ரத்த பரிமாற்று முறை குறித்து பயிற்சி மருத்துவர்கள் அறிந்துகொள்ள வேண்டும் என திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அழ. மீனாட்சிசுந்தரம் கூறினார்.
திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் உலக ரத்த கொடையாளர் தினத்தையொட்டி அண்மையில் நடைபெற்ற ரத்த பரிமாற்று மருத்துவம் குறித்த கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது :
ரத்த பரிமாற்று மருத்துவம் விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பகுப்பாய்வு செய்து அதை காரணிகளாக செலுத்தும் முறை தற்போது பிரபலமடைந்து வருகிறது.
இத்தகைய நவீன சிகிச்சை முறை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ளது. ரத்த வங்கிகளில் பணியாற்றுவது குறித்தும், ரத்த பரிமாற்று முறையை எப்போது செய்ய வேண்டும் என்பது குறித்தும் பயிற்சி மருத்துவர்கள் அறிந்துகொள்வது அவசியம் என்றார் மீனாட்சிசுந்தரம்.
கருத்தரங்கில் ஸ்டான்லி மருத்துவமனை ரத்த பரிமாற்று துறைத் தலைவர் ராஜ்குமார் பங்கேற்று, வளர்ந்து வரும் மருத்துவ முறைகள் குறித்தும், குருதி கொடையாளர்களிடமிருந்து வேண்டிய அணுக்களைப் பிரித்தெடுத்து மீதி உள்ள காரணிகளை கொடையாளர்களுக்கே திரும்ப செலுத்தும் முறை பற்றி விளக்கினார்.
இதேபோல், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி ரத்த வங்கியைச் சேர்ந்த உதவிப் பேராசிரியர் லதா பங்கேற்று ரத்த வங்கி செயலாற்றும் முறை குறித்து விளக்கினார்.
திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் ரத்த வங்கி அலுவலரும், மாவட்ட ரத்த பரிமாற்று மருத்துவ அலுவலருமான டாக்டர் பிரதியுஷா மெரவாலா பங்கேற்று, ஆண்டுக்கு 6,000 ரத்த கொடையாளர்கள் ரத்த தானம் செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
கருத்தரங்கில் நோய் குறியியல் துறைத் தலைவர் கல்யாணி, இணைப் பேராசிரியர் அசோக், துணைக் கண்காணிப்பாளர் கண்ணன், துணை முதல்வர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.