சுடச்சுட

  

  வடுவூர் ஏரியில் தூர்வாரும் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும்: எம்எல்ஏ டி.ஆர்.பி. ராஜா

  By DIN  |   Published on : 24th June 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தொகுதிக்குள்பட்ட வடுவூர் ஏரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 24) தூர்வாரும் பணி தொடங்கவுள்ளதையொட்டி, அங்கு தூர்வாரப்படும் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்க வேண்டும் என தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்தார்.
  இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை : வடுவூர் ஏரி 316 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரிக்கு தஞ்சை மாவட்டம், கள்ளப்பெரம்பூர் பிரிவு வடவாற்றிலிருந்து தண்ணீர் வருகிறது. இந்த ஏரி மூலம் நேரிடையாக 1,400 ஏக்கரும், மறைமுகமாக 9,500 ஏக்கரும் பாசன வசதி பெற்று வந்தன.
  பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் இருந்த இந்த ஏரி, கடந்த 1991 -ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசிதழில் வெளியிட்டு, வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. 27 ஆண்டுகளாக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரி பராமரிப்பின்றி, தற்போது தூர்ந்துபோய் மண்மேடாக மாறிவிட்டது. இதை குறைந்தபட்சம் 3 மீட்டர் அளவுக்கு தூர்வார வேண்டும் என்று பலமுறை கோரிக்கை வைத்தும் பலனில்லை.
  கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் ஒரத்தநாடு தொகுதி முன்னாள் உறுப்பினர் திமுகவை சேர்ந்த பி. ராஜமாணிக்கம் முயற்சியினால் ஏரியை தூர்வாரி பராமரிக்க ரூ. 3.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு ஆட்சி மாற்றம் காரணமாக அத்திட்டம் முடக்கப்பட்டது.
  இந்த ஏரியில் 5 அடிக்கு மேல் இயற்கை சத்து மிகுந்த மண் உள்ளது. இந்த மண்ணை எடுக்கக்கூட விவசாயிகளை வனத்துறை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. ஏரியில் படரிக்கிடக்கும் லட்சக்கணக்கான பறவைகளின் எச்சங்கள் கலந்து மக்கிப்போய் சக்தி வாய்ந்த ஊட்டச்சத்து மிகுந்த இயற்கை உரமாக மாறியிருக்கும். இந்த சத்தான மண்ணை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அரசு அனுமதிக்க வேண்டும்.
  இந்நிலையில், வடுவூர் ஏரி தூர்வாறுதல் தொடர்பாக, நான் சட்டப் பேரவையில் 2012 -ஆம் ஆண்டு முதல் தற்போது நடைபெற்று வரும் கூட்டத் தொடர் வரை கேள்வி நேரம், மானிய கோரிக்கையிலும், கவன ஈர்ப்பு தீர்மானங்களும் கொடுத்து அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன்.
  இந்தச் சூழலில் தற்போது மழைக்காலம் தொடங்க உள்ள சூழ்நிலையிலும், காவிரியில் தண்ணீரை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கும் நிலையிலும் வடுவூர் ஏரியை தூர்வாரப்போகிறோம் என்று அரசியல் லாபத்துக்காக ஆளும் கட்சி இறங்கியுள்ளது. தற்போதும்கூட வடுவூர் ஏரிக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து தூர்வாரினாலும் எடுக்கப்படும் மண் அப்படியே விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும். இதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அதில் எம்எல்ஏ ராஜா தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai