சுடச்சுட

    

    சென்னையில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திருவாரூர் மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 170 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
    பெரம்பலூர், நாமக்கல் மாவட்டத்தில் ஆய்வு செய்ய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்றபோது, எதிர்ப்புத் தெரிவித்து கருப்புக் கொடி காட்டிய திமுகவினரை போலீஸார் கைது செய்தனர். இதைக் கண்டித்து ஆளுநரிடம் மனு கொடுக்க சென்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் கைது செய்யப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம், நீடாமங்கலம், மன்னார்குடி உள்ளிட்ட 6 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 170 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். திருவாரூர் பேருந்து நிலையம் முன்பு, திமுக மாவட்டச் செயலர் பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலின்போது, திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை விடுவிக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    நீடாமங்கலத்தில்...
    நீடாமங்கலத்தில் திமுக முன்னாள் இளைஞரணி அமைப்பாளர் ராம்ராஜ் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட 12 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
    மன்னார்குடியில்...
    சென்னையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்ற திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மன்னார்குடியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினர் 50 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
    முன்னாள் எம்எல்ஏ பி. ராஜமாணிக்கம் தலைமையில், பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜி. பாலு, நகரச் செயலர் வீரா. கணேசன், ஒன்றியச் செயலர் க. தனராஜ் உள்ளிட்ட 50 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    திருத்துறைப்பூண்டியில்...
    திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட, நகரச் செயலர் பாண்டியன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இளையராஜா, முன்னாள் ஒன்றியச் செயலர் முகில். ராஜேந்திரன் உள்ளிட்ட 25 பேர், விளக்குடியில் ஒன்றியச் செயலர் பிரகாஷ் தலைமையிலான மறியலில் ஈடுபட்ட 20 பேரை போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
    இதேபோல், பாண்டியில் திருத்துறைப்பூண்டி சட்டப் பேரவை உறுப்பினர் ப. ஆடலரசன் தலைமையில் நடைபெற்ற சாலை மறியலில் ஈடுபட்ட திமுக ஒன்றியச் செயலர் மனோகரன், மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், கோவிந்தராஜ், ஒன்றிய அவைத் தலைவர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட 20 பேரை எடையூர் போலீஸார் கைது செய்து பின்னர்
    விடுவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai