சுடச்சுட

  

  காவிரிப் பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி

  By DIN  |   Published on : 25th June 2018 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரிப் பிரச்னையில் தமிழக விவசாயிகளுக்கு துரோகம் இழைத்தவர் திமுக தலைவர் கருணாநிதி தான் என, திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை நடைபெற்ற காவிரி நதிநீர் உரிமை மீட்பு வெற்றி விளக்கப் பொதுக் கூட்டத்தில் பேசிய தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் கூறினார்.
  திருத்துறைப்பூண்டி தெற்குவீதியில் அதிமுக சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அமைச்சர் மேலும் பேசியது:
  காவிரிப் பிரச்னை தொடர்பாக, 1972-ஆம் ஆண்டு போடப்பட்ட வழக்கை சில அரசியல் காரணங்களுக்காக 1973-ஆம் ஆண்டு வாபஸ் பெற்று,  தமிழகத்துக்கு மிகப் பெரிய துரோகம் இழைத்தது திமுக தான். 1986-இல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அதைத்தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் பல சட்டப் போராட்டங்களை நடத்தியும், உண்ணாவிரதம் இருந்தும்  மத்திய அரசிதழில் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிடச் செய்தார். காவிரி நதி நீர் உரிமை மீட்க்கப்பட்ட பெருமை அனைத்தும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையே சேரும்.
   தற்போது, மு.க. ஸ்டாலின் பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இதுகுறித்து வாய் திறக்கவில்லை. அண்ணாஅறிவாலயத்தில் போட்டி சட்டப் பேரவைக் கூட்டம் நடத்தியது கேலிக்கூத்தானது. ஆளுநர் மாளிகை முன்பு மு.க. ஸ்டாலின் நடத்தியப் போராட்டமும் மற்ற போராட்டங்களும், சட்டப் பேரவைக் கூட்ட தொடரில் பேசிய ஸ்டாலின், ஸ்டெர்லைட் பிரச்னையில் முதல்வர் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கூறி வெளிநடப்பு செய்ததும் அவர் முதல்வர் ஆக முடியவில்லையே என்ற விரக்தியின் வெளிபாடுதான்.
  ஜெயலலிதா வழியில் வந்த முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் காவிரிப் பிரச்னையில் வெற்றி கண்டுள்ளனர். மு.க. ஸ்டாலின் மற்றும் டி.டி.வி. தினகரன் ஆகியோர் இந்த ஆட்சி எப்படியாவது கலைந்துவிடும் என கனவு காண்கின்றனர்,  அந்த கனவு பலிக்காது என்றார்.
  இக்கூட்டத்துக்கு  அதிமுக நகரச் செயலாளர் டி.ஜி. சண்முகசுந்தர் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் க. சிங்காரவேல் வரவேற்றார். நாகை மக்களவை உறுப்பினர் டாக்டர் கே. கோபால், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஏ. தமிழரசன், ஏ. ஜெ. ஏங்கல்ஸ், மாவட்ட அவைத் தலைவர் கோ. அருணாசலம், மாவட்டத் துணைச் செயலர் உ. பாலதண்டாயுதம், முன்னாள் மாவட்டத் துணைச் செயலாளர்  ஆர்.கே.பி. விஸ்வநாதன், முன்னாள் நகர்மன்றத் தலைவர் கே. உமாமகேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பாலதண்டாயுதம் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai