Enable Javscript for better performance
தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்தவர் கருணாநிதி: ஆர்.வைத்திலிங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்தவர் கருணாநிதி: ஆர்.வைத்திலிங்கம்

    By DIN  |   Published on : 25th June 2018 01:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகத்தின் உரிமையை விட்டுக் கொடுத்தது கருணாநிதி என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் குற்றம்சாட்டினார்.  
    ஒரத்தநாட்டில் அதிமுக சார்பில் காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விளக்க பொதுக் கூட்டம் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர் கோவி.தனபால் தலைமை வகித்தார். தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.துரைக்கண்ணு, தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், தஞ்சை தெற்கு ஒன்றியச் செயலாளர் துரை.வீரணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
    கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.வைத்திலிங்கம் பேசியதாவது:
    முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் விடாத முயற்சியால் காவிரி  உரிமை பிரச்னையில் தமிழகத்திற்கு வெற்றி கிடைத்திருக்கிறது. கடந்த 1924ஆம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தை மீறி கர்நாடக அரசு 1968ஆ ஆண்டு  அம்மாநிலத்தில் புதிதாக அணைகளை  கட்டியது. அப்போது தமிழகத்தில் அண்ணா தலைமையில் ஆட்சி நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சராக கருணாநிதி இருந்தார். அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். 
    அண்ணா இறந்த பிறகு கருணாநிதி முதலமைச்சரானார். அவர் காவிரி பிரச்சனை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.  ஆனால் அடுத்த ஆண்டே அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி கேட்டுக் கொண்டதன் பேரில் வழக்கை திரும்பப் பெற்றார். 
    அன்று தான் காவிரி பிரச்னையில் தமிழகத்திற்கு கேடு ஆரம்பமானது. அதன்பிறகு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் இப்பிரச்சனை தொடர்பாக கர்நாடக முதலமைச்சர்களுடன்  பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு முதலமைச்சரான ஜெயலலிதா காவிரி பிரச்னையில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட உச்சநீதிமன்றத்திற்கு சென்று போராடி  அதனை மத்திய அரசிதழில்  வெளியிட வைத்தார். அதன்பிறகு அவர் காட்டிய வழியில் செயல்படும்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான  தமிழக அரசு  உச்சநீதிமன்றத்தின் மூலம்  தொடர்ந்து போராடி காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு  அமைக்கப்பட்டுள்ளது. காவிரி உரிமை மீட்பு போராட்டத்தில்  அதிமுக அரசு போராடி பெற்றுள்ள வெற்றி வரலாற்று சாதனையாகும். ஆனால்  கருணாநிதி தனது குடும்பத்தின் சுயநலத்துக்காக  தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தார். மேட்டூர் அணையில் குறைவாக தண்ணீர் இருப்பது தெரிந்தும், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அரசியல் லாபத்துக்காக மேட்டூர் அணை ஏன் திறக்கவில்லை என கேட்கிறார். 
    சட்டப் பேரவையில் ஜெயலலிதா கூறியது போல, அ.திமுக கட்சி, ஆட்சி நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்றார்.
    கட்சியின் தேர்தல் பிரிவு செயலாளரும், சட்டபேரவை துணைத் தலைவருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.கோவிந்தராசு, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் துரை.திருஞானம், மாவட்ட மாணவரணி செயலாளர் ஆர்.காந்தி, மகளிரணி செயலாளர் அமுதா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் வரவேற்றார். ஒரத்தநாடு நகரச் செயலாளர் த.செல்வம் நன்றி கூறினார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai