சுடச்சுட

  

  வடுவூர் ஏரி தூர்வாரும் பணி: அமைச்சர் ஆர். காமராஜ் தொடங்கி வைத்தார்

  By DIN  |   Published on : 25th June 2018 03:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலய ஏரியைத் தூர்வாரும் பணியை தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தார்.
  மன்னார்குடி- தஞ்சாவூர் பிரதான சாலையில் உள்ள வடுவூரில், 316 ஏக்கர் பரப்பளவில் பறவைகள் சரணாலய ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு தஞ்சையை அடுத்த கள்ளபெரம்பூர் வடவாற்றின் மூலம் தண்ணீர் வந்தடைகிறது. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 11 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு பாசனவசதி கிடைக்கிறது. பொதுப்பணித்துறையின் கீழ் இருந்த இந்த ஏரி, கடந்த 1991-ஆம் ஆண்டு பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு, வனத்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது.
  அதில் இருந்து கடந்த 27 ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாததால், மண் மேடாக காட்சியளித்தது. எனவே, ஏரியைத் தூர்வார வேண்டுமென விவசாயிகள், பொதுநல அமைப்பினர் தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.
  அதன்படி, வடுவூர் ஏரியைத் தூர்வார தமிழக அரசு அண்மையில் அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து, ஏரியைத் தூர்வாரும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இந்நிகழ்ச்சியில், தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் கலந்துகொண்டு, ஏரியைத் தூர்வாரும் பணியைத் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், அவர் பேசியது : 
  காவிரி டெல்டா பகுதிகளில் முக்கிய ஆறுகளும், அதன் கிளை ஆறுகளும் ரூ.1,560 கோடி செலவில், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் தூர்வாரப்பட்டு வருகின்றன. முதல்கட்டமாக ரூ.900 கோடி மதிப்பீட்டில் திருவாரூர், நாகை மாவட்டத்தில் ஆறுகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. நிகழாண்டு குடிமராமத்துப் பணிக்காக தமிழக அரசால் ரூ.300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்துக்கு மட்டும் ரூ. 10.37 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
   வடுவூர் ஏரியில் எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாய நிலங்களை மேம்படுத்தவும், சொந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். சுமார் 100 ஏக்கர் பரப்பளவில், தோராயமாக ஒரு மீட்டர் ஆழத்துக்கு சுமார் 4 லட்சம் கன மீட்டர் அளவுக்கு வண்டல் மண் எடுக்கப்படவுள்ளது. இதை விவசாயிகள் தங்களது விளைநிலங்களுக்கும், சொந்த பயன்பாட்டுக்கும் பயன்படுத்தி வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். இதன் மூலம் 1,356 ஏக்கர் பரப்பளவு கொண்ட பாசன நிலங்கள் பயனடைகின்றன என்றார் அமைச்சர் ஆர். காமராஜ்.
  நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் அறிவொளி, மன்னார்குடி வருவாய்க் கோட்டாட்சியர் பத்மாவதி, வெண்ணாறு வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் அசோகன், மன்னார்குடி வட்டாட்சியர் மலைமகள், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கோ. அரிகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர் (வெண்ணாறு) இளங்கோ, நிலவள வங்கி முன்னாள் தலைவர் எஸ்.டி. செந்தில்ராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai