சுடச்சுட

  

  ஆட்டோ நிறுத்துதலில் பிரச்னை: நடவடிக்கை கோரி சாலை மறியல்

  By DIN  |   Published on : 26th June 2018 08:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகே ஆட்டோ நிறுத்துதல் தொடர்பான புகார்  மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  திருவாரூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் நடத்திய சாலை மறியலில் ஈடுபட்ட  100 பேர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனர். 
  திருவாரூர் மாவட்டம்,  கொரடாச்சேரி வெட்டாற்று பழைய பாலம் அருகே சிஐடியு ஆட்டோ நிறுத்தம் உள்ளது. சில  நாள்களுக்கு முன்பு புதிய பாலம் அருகே  சிலர் ஆட்டோக்களை  நிறுத்தியுள்ளனர். இதில், இருதரப்பினரிடையே  பிரச்னை  ஏற்பட்டுள்ளது.  இதுகுறித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் அளித்த புகார் மீது எவ்வித  நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையென கூறப்படுகிறது. 
  இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர்கள், திருவாரூர் பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், ஆட்டோ  ஓட்டுநர்கள் சங்கச் செயலர் எம்.கே. அனிபா, சிஐடியு  மாவட்டப் பொருளர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் குணசீலி, டிஎஸ்பி நடராஜன் ஆகியோர் போராட்டக் குழுவினருடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai