சுடச்சுட

  

  நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  By DIN  |   Published on : 26th June 2018 08:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நகராட்சி பகுதியில் செயல்பட்டு வரும், சாலையோர மீன் கடைகளை அப்புறப்படுத்தக் கோரி, நவீன ஒருங்கிணைந்த மீன் அங்காடியில் கடை வைத்திருக்கும் மீன் வியாபாரிகள் நலச் சங்கத்தினர், மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
  திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகராட்சியின் சார்பில், தாமரைக்குளம் வடகரையில் கடந்த ஆண்டு நவீன ஒருங்கிணைந்த மீன் அங்காடி திறக்கப்பட்டது. இந்த அங்காடியில் உள்ள 28 கடைகள், மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகனங்களில் மட்டுமே மீன் விற்பனை செய்யப்படும் என்றும், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்தைப் பாதுக்காக்கும் வகையில், சாலையோர மீன் கடைகளுக்கு அனுமதியில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.
   இந்நிலையில், அண்மைக் காலமாக மீண்டும் சாலையோர மீன் கடைகள் அமைக்கப்பட்டதால், மீன் அங்காடியில் ரூ.1 லட்சத்துக்கு மேல் முன்பணம் செலுத்தி, வாடகைக்கு கடை பிடித்து மீன் வியாபாரம் செய்து வருபவர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி வருவதாக நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தனர். மேலும், சாலையோர மீன் கடைகளுக்கும், விடுமுறை நாள்களில் அமைக்கப்படும் தற்காலிக மீன் கடைகளுக்கும் அனுமதி அளிக்கக் கூடாது என ஒருங்கிணைந்த மீன் அங்காடி மீன் வியாபாரிகள் கோரிக்கை மனு அளித்தும் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை ஒருங்கிணைந்த மீன் வியாபாரிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மீன் வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் ஆர். பக்கிரிசாமி தலைமை வகித்தார். இதில், சங்க ஆலோசகர் எம்.ஏ. ஹஜ்ஜிமைதீன், செயலர் எம்.எஸ். இளங்கோவன், பொருளாளர் என்.ஜி. முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  தகவலறிந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் வ. அசோகன் மற்றும் நகராட்சி ஆணையர் என். விஸ்வநாதன் ஆகியோர் மீன் வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், உடன்பாடு ஏற்பட்டதையடுத்து முற்றுகைப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai